கதிர்காமத்து அம்மானை
பாரெலா மளந்த8 / 18
கதிர்காமத்து அம்மானை
பாரெலா மளந்த
15விருத்தம்✓
பாரெலா மளந்த மாயோன் பாவை லட்சுமியா ளோடு
மாரனை நினைந்து ஞான போகமாய் வனத்தி லேகிச்
சீரெனக் கலைக ளாகத் தேவியும் பெண்மா னாகக்
காரென வனத்திற் சென்று கலவியிற் கலந்த தன்றே.
16நடை✓
பாரெல்லா மோரடியாற் பகுந்தளந்து மாயோனும்
தாரணியைக் காக்குஞ் சரிதைகே ளம்மானை
பூலோக ராசாங்கம் புரிந்த அசுரர்களை
மேலவர்கள் சொற்படிக்கு வேலவனார் தானழித்து
சூல கபாலி சுந்தரஞ்சேர் மாதுமைதன்
பாலகனுந் தான்மகிழ்ந்து பழனிதனி லிருந்தார்
பைகொண்ட நாகப் படத்தினிற் பள்ளிகொள்ளும்
வைகுந்த வாசன் வனத்திற் றிருவுடனே
சேர்ந்தணைய வென்று சேயிழையாள் பெண்மானும்
கார்மேக வண்ணன் கலைமானுமாய்ப் புணர்ந்தார்
தெய்வபிண்ட மாகையால் சேரவொரு பெண்குழந்தை
வையம் மதிக்க வந்துதித்த தம்மானை
வந்துதிக்கப் பெண்சிசுவும் மாயோனும் லெட்சுமியும்
சந்தோஷ மாகித் தங்களூரு வெடுத்தார்
கார்பூத்த அவ்வனமுங் கன்னியவள் தானுதிக்க
சீர்பூத்த வாறெனவே செழித்ததுகா ணம்மானை
ஆலிலைமேல் பள்ளிகொண்ட அச்சுதனுந் தேவியரும்
பாலகியைத் தானீன்று பாங்கா யகன்றனராம்
வனத்தில் மதலை வருந்தி அழாதபடி
கனைத்து மிருகமெலாங் காட்சிகொடுத் தாற்றினதாம்
குறவர் வனத்துதித்த குழந்தை துயில்வதற்கு
பறவையினம் வந்து பாவனைகள் காட்டிடுமாம்
சர்ப்பமொடு யாளிசிங்கம் தந்தி கரடிபுலி
அற்புதமாய் அங்குநின்று அருங்காவல் செய்திடுமாம்
இவ்வளமை கண்டு இமையோர் கணநாதர்
அவ்வையர்க்குப் பூமாரி அருளோங்கப் பெய்தனராம்
அழாமலிலங் குழந்தை ஆச்சரிய முற்றிருக்க
குழகன் மணப்பெருமை கூறக்கே ளம்மானை
தென்னிலங்கை மாபதியிற் சிற்றூர் நகரதிலே
மன்னவனாய் வேலநம்பி மந்திரிமார் தற்சூழ
ஆண்டுவரும் நாளையிலே அரிவை செவிலியரும்
மீண்டுமொரு பெண்குழந்தை வேண்டித் தவமிருந்தாள்
ஆரணியந் தன்னி லரிவை தவம்புரிய
பார்செழிக்க மானீன்ற பாவை வனத்திருந்தாள்
மதிபருதி தானும் மானீன்ற கன்னியரை
கதிபெருக்கக் கண்டு கருணைமொழி பெய்திடுமாம்
தந்தி கரடிபுலி சர்ப்பமொடு யாளிசிங்கம்
சுந்தரமாய் வந்து சோபனங்கள் செய்திடுமாம்
மதலை அழவே வானவர்கள் தான்மகிழ
குதலைதனை எடுத்துக் குற்றம் வராதபடி
பூமாது கார்த்துப் பொற்கொடியை வைத்திருக்க
வாமாதே என்று வரங்கேட்டான் வேலநம்பி
வனத்தி லனேகரொடு மாவேட்டை ஆடுதற்கு
அனர்த்த மணுகாமல் அருள்தருவீ ரெந்தனுக்கு
என்று வணங்கும் எயினர்களைத் தான்பார்த்து
பண்டு குலமுறைமை பழுது வராதபடி
மாவேட்டை ஆடி மனது களிகூர்ந்து
தேவ கதிபெற்றுக் தேமாங் கனிஎடுத்து
கொண்டுவா வென்று குறத்தி செவிலியரும்
நன்றுவர மீந்தாள்காண் நல்லமிர்த வாய்மொழியாள்
சென்றாரே நம்பிதனம் சிலைவாளி தானெடுத்து
வண்டாடுங் கார்வனத்தில் மான்வேட்டை ஆடுதற்கு
போகும் வழியிற் பொற்பாவை தோணுவதும்
காகங் கரைந்து கதிபெறுவீ ரென்பதையும்
ஏந்தலனார் கண்டு இப்புதுமை இவ்வனத்தில்
சேர்ந்ததென மகிழ்ந்து திரண்டோர் சிலைவளைத்து
சரத்தைத் தொடுக்கத் தட்டிழிந்து மான்மரைகள்
இரைச்சல் குமுறலுடன் எழுந்தோடிப் போகையிலே
பறவையொடு பன்றிமுயல் பாங்கான தந்திகளை
குறவர் தளங்கூடிக் கொன்றழித்த பின்பவர்கள்
தாகம் பெருகித் தண்ணீர் விடாயெடுத்து
தோகை செவ்விவளரும் தொல்வனத் தைத்தொடர
ஆகம் களைத்து அரியவிடா யாகிஉமை
பாகன்றனை நினைக்கப் பாணியெதிர் தோன்றிடவே
தண்ணீரைக் கண்டு தாகவிடா யோடுவர
கன்னி அழுதகுரல் கானவர்கள் தான்கேட்டு
நாடி நடந்து நற்குழவி வாழுமிடம்
கூடியே கண்டு குழந்தை தனைஎடுத்து
முத்தமிட்டு வேலநம்பி மோர்ந்தணைத்து மகிழ்ந்து
கர்த்தன் செயலிதுவோ கானவர்கள் ஈடேற
வள்ளிக் கொடிக்கருகில் மகவைஇங்கு ஈன்றவள்யார்
புள்ளிமான் காற்றடமே பொற்கொடிமார் வந்ததில்லை
அண்ண லதிசயித்து அவையோர்க் கறைவதுதான்
மண்விண் அளந்த மாயவனார் மாயையதோ
வடிவேலர் தன்செயலால் மானீன்ற பிள்ளைஎன்று
அடிபணிந்து தெண்டனிட்டு அறுமுகனே தஞ்சமென
இந்தமின்னார் கந்தருக்கு எழில்மனைவி ஆவளென்று
சந்தோஷ மாகத் தான்பணிந்து வேடரெல்லாம்
கொண்டாடிக் கொண்டாடிக் குழந்தைதனை ஏந்தி
சென்றாரே வேடுவர்கள் செவிலி குதலைஅழ
வந்து எதிர்நின்று மதலை ஏதுங்களுக்கு
சிந்தை களிகூரச் செப்புமென்றா ளம்மானை
மாதிவள்தன் சொற்கேட்டு வனவேட ரெல்லோரும்
பாதம் பணிந்து பாவையரைக் கைக்கொடுத்து
தாயாரே மான்வேட்டை தானாடி நிற்கையிலே
சேயழுத சத்தம் செவிதனிலே தான்கேட்டு
அச்சமொடு சென்று ஆவலுடனே எடுத்து
பட்சமுடன் வந்தோம் பழுது வராதபடி
வளர்த்து மகவை மனமகிழ வைத்திருந்தால்
தழைக்கும் நமதுகுலந் தாரணியு மீடேறும்
மானீன்றதே ஒழிய மாதீன்ற கன்னியல்ல
வானீன்ற மாமதிபோல் வளர்த்து மகிழ்ந்திருப்பீர்
என்றுதான் வேலநம்பி இவ்வசனந் தானுரைக்க
நன்று நமக்கிப்போ நற்குழந்தை வந்ததென்று
வள்ளிக் குழியருகில் மானீன்று விட்டமையால்
தெள்ளியதோர் வள்ளிஎன்று திருநாம மிட்டழைத்து
வரிவிழிக்கு மையெழுதி மங்கைமணிக் காப்புமிட்டு
கரியமணி சங்குமணி கழுத்துக்கு ஆரமிட்டு
பவளமணி முத்துமணி பச்சைமணி மாலையிட்டு
குவளைவிழி வள்ளியர்க்குக் குற்றம் வராதபடி
சாணைத் துணியில் சந்தனம்பன் னிர்தெளித்து
பேணித் திருநீற்றுப் பொட்டுமிட்டுத் தான்வாழ்த்தி
காணிக்கை கட்டி கந்தவேளைத் தொழுது
மாணிக்கம் போலே வளர்த்தார் குறவரெல்லாம்
வள்ளி அழாதபடி மரநாராற் தொட்டிலிட்டு
அள்ளிமலரை அதிற் பரப்பித் தான்வளர்த்தி
காட்டிலே மானீன்ற கன்னியரே என்றுசொல்லி
ஆட்டிடுவார் தொட்டிலதை ஆரணிய வேடுவர்கள்
கஞ்சமலர் மெத்தையிலே கன்னிவள்ளி தான்துயில
வஞ்சியர்கள் தாலாட்டும் வன்மைகே ளம்மானை
வள்ளிக் குயிலே மானீன்ற பாவையரே
சொல்லிற் கிளியே துடிபோ லிடையாளே
வேடுவர்க ளீடேற மேதினியோர் தான்வாழ்க
காடு நகர்செழிக்க நல்லமழை தான்பொழிய
இமையோர் மகிழ இவ்வுலகு மீடேற
உமையாள் புதல்வர் உம்மை மணம்புரிவார்
பன்னிரண்டு கையுடையான் பாங்காக உன்னையுந்தான்
எண்ணிரண்டு ஆண்டுதனி லேற்பார்கா ணோவியமே
சந்தனச் சோலைகளும் தங்குமலர் வாவிகளும்
விந்தைபெறு மாணிக்கம் மேவிவளர் கங்கைகளும்
எங்கு மலையும் இங்குமலர்ச் சோலைகளும்
தங்கி யிருக்கும் தலமிதுகா ணென்றுசொல்லி
தாராட்டித் தாராட்டித் தார்குழலை முத்தமிட்டு
ஓராட்டி மாதரெல்லாம் ஒண்டொடிக்குப் பாலூட்டி
வளர்த்தார் குறமாதர் வானவர்கள் தான்புகழ
தளைத்தா ளறுமுகற்குத் தையல்வள்ளி சிற்றூரில்
ஆண்டுவய தொன்றிரண்டு அத்தோடு மூவாண்டு
தோன்றும்வய தீரிரண்டு சொல்வதுஐ ஐந்தாறில்
ஓடி விளையாடி ஊஞ்சலதில் தானேறி
பாடி நடனமிட்டுப் பாவையருந் தான்வளர்ந்து
ஏழு வயதில் இணைத்தோழி மாருடனே
வாழும் வயதெட்டில் வனத்தில் மலரெடுத்து
செல்ல விளையாட்டுஞ் சீரா யுடைநடையும்
மெல்லிய ரிருவரொடு விளையாடித் தானிருந்து
பாவை வயதொன்பான் பத்துவய தானபின்பு
காவி வரிவிழியாள் கன்னிப் பருவமெழ
கண்டுவன மாதரெல்லாங் கன்னியரை முத்தமிட்டு
கொண்டு கமலமதால் குளிப்பாட்டிக் கோதையர்க்கு
காதுக்குத் தோடணிவார் கைக்குவெள்ளிக் காப்பிடுவார்
கோதிக் குழல்முடிப்பார் கொண்டைக்குப் பூவணிவார்
கண்ணுக்கு மையெழுதிக் காலுக்குத் தண்டையிட்டு
வண்ணத் துகிலுடுத்தி வாழ்த்திவன மாதரெல்லாம்
மஞ்சட் கரைத்தழுத்தி மார்புமுகந் தேகமெல்லாம்
கொஞ்சிக் குரவையிட்டுக் குறமாதர் கொண்டாடி
வாணி திருமகளோ வரந்திஅயி ராணியுமோ
பாணி ரதியோ பரமன் மருமகளோ
மங்கையரை வாழ்த்தி வனிதையர்கள் கொண்டாட
சங்கரனும் பார்வதியும் தான்மகிழ்ந்தா ரம்மானை
வனமாதர் கூடி வள்ளிக் கமிர்தமென
தினைமாவைப் பிட்டவித்துத் தேனூற்றி யேகொடுப்பார்
அருந்திச் சடங்கறுத்து அண்ணன்மார் சொற்படியே
இருந்துவள்ளி கந்தரைத்தான் எண்ணித்தி யானமுற்றாள்
அப்படியே வள்ளி அவள்வாழும் நாளையிலே
செப்பரிய கானகத்திற் தினைவிதைக்க வேணுமென்று
காடுசெடி முள்வெட்டி கனல்மூட்டி மல்லரெல்லாம்
மேடு மடுத்திருத்தி விதைத்தார் தினையதனை
விலங்கினங்கள் கூடி விதைமுளையைத் தின்னாமல்
துலங்குஞ் சரவேலி தொடுத்துக் காப்புமிட்டு
பட்சிஎலி பன்றிமுயல் பாங்கான மான்மரைகள்
இச்சித் தழியா லெண்ணிக் குறவரெல்லாம்
காவல் வைக்கவெண்ணிக் கானவர்கள் தான்கூடி
ஆவலோடு வள்ளியை அங்குவைப்போ மெனவுரைத்து
புனவர் மகிழ்ந் துதினைப் புனத்திலொரு வீடியற்ற
வனத்தி லுயர்ந்த மரந்தேடிச் சென்றவர்கள்
சந்தனத் தூண்வெட்டிச் சதுரப்பட நாட்டி
சுந்தரமா யம்மரத்தாற் தொடுத்தார் வளைகளெல்லாம்
படிகமதாற் கைமரமும் பாங்காய் நிலைக்கதவும்
வடிவி னொளிபரவ முக்கொழுந்தால் மேய்ந்தபின்பு
முத்த மலங்கரித்து முருகவேளைத் தொழுது
பத்திபெறு ரெத்தினத்தாற் பாங்காய் விளக்கேற்றி
அத்திர வேல்விழியாள் ஆரணங்கு தானிருக்க
சித்திரமா யோர்பரணுஞ் செய்தனர்கா ணம்மானை
மலைமேற் குறவர்கோன் வள்ளியரைத் தானழைத்து
சிலைபோல் புருவவிழித் தேனே எனமொழிந்து
நம்முடைய கானகத்தில் நாங்கள் தினைவிதைத்தோம்
உம்முடைய தோழியரோ டுற்றுறவாய் நீயிருந்து
கிள்ளைவந்து கொய்யாமற் கீரியொடு மான்மரைகள்
துள்ளி அழிக்காமற் தோழிமா ரோடெழுந்து
நாலு திசையும் நடந்து துரத்திடவே
காலுங் கடுத்தலுத்தாற் கையிற் கவணெடுத்து
வந்துதினை கொய்யாமல் மாதே எறிந்திடென
சந்தோஷ மாயுரைக்கத் தானுமவள் சம்மதித்து
சிந்தை களிகூர்ந்து செப்புமொழி தப்பாமல்
விந்தையிரு தாதியொடு விடைகொண்டா ளம்மானை
கற்பி லுயர்ந்த கன்னியர்க்கு வேடுவர்கள்
அற்புதமா யம்புசிலை அழகுபெறத் தான்கொடுத்து
வன்னக் கவணுடனே மாணிக்கக் கற்கொடுத்து
மின்னாரைத் தானழைத்து மேவும் பரணிருத்தி
ஆலோல மென்றே யானையொடு மான்மரையை
வேலா வெனநினைந்து வீசித் துரத்தும்ம்மா
காடை கவுதாரி கடுகிவந்து தின்னாமல்
மாடப் புறாவினங்கள் வந்துதினை கொய்யாமல்
தாரா மயில்குயில்கள் சம்புக் குருளியுடன்
வாராமல் வள்ளியரே வன்னக் கவணெடுத்து
அகலத் துரத்திவிடு மாலோல மென்றுசொல்லி
புகலப் பெருவனத்திற் பொற்கொடியே யஞ்சாமல்
கந்தர்தனை நினைந்தால் கன்னியரே யிவ்வனத்தில்
உந்தனக்கு மெங்களுக்கு மொருகுறையும் வாராது
கங்கைதனிற் குளித்துக் காங்கேயனைத் துதித்து
தங்கையரே காருமென்று தானுரைத்தா ரம்மானை
மங்கையிரு பேருடனே வன்னக் கவணெடுத்து
துங்கப் பரணதனிற் சோதியொளி போலிருந்து
வச்சிரம்போற் கைக்கவணில் மாணிக்கக் கல்வைத்து
பட்சி பறந்துவரப் பாவையருந் தானெறிந்தாள்
குருகினங்கள் கிள்ளைபுறாக் கூட்டமொடு தானகல
அருகிருந்த தாதியொடு அகமகிழ்ந்தா ளம்மானை
அண்ணமார் கண்டு அழகுசெறி வள்ளியரே
பண்ணவர்கள் தான்மகிழப் பாங்கிமா ரோடிருந்து
காருந் தினைப்புனத்தைக் கனிகிழங்கு தேனெடுத்து
வாரோமென் தங்கையரே மாண்புடனே நீரிருப்பீர்
என்றுவன வேடுவர்க ளேகுந் ததியதனில்
நின்று கவணெறிந்து நீள்குழலா ளோலமிட்டு
மெய்யரென விளங்கும் மேதினியோர் தங்களிலே
பொய்யாப் பழியைப் பொருத்தவென நினைந்து
நாரத மாமுனிவர் நான்முகனைப் போற்றிசெய்து
பாரதனைச் சுற்றிப் பார்த்து வலம்வரவே
சேடி யிருவரோடு சேயிழையா ளோலமிட
கோடிப் பெருமையுறுங் கோமுனிவர் கேட்டுநின்று
தாவு மயூறமதோ தையலோ வையமதில்
கூவுங் குயிலோ குரலோசை யாரதென்று
தேடிவர மாமுனியுந் தினைப்புனத்தில் வள்ளியரை
நாடியே கண்டு நான்முகனைத் தான்தொழுது
உந்திக் கமலத்து உதித்தோனே யிப்புவியில்
சிந்தைமகிழப் படைத்துத் தினைப்புனத்தில் வைத்தீரே
பஞ்சசத்தி அட்டசத்தி பாருலகிற் கற்புடையோர்
அஞ்சப் படைத்து மரியவனம் வைத்தீரே
நாலு முகத்தோனே நரபதியே மாலோனே
வேலருக்காய்ப் பெண்ணாக விரைவிற் படைத்தீரோ
வீணை கரத்திலங்கும் விமல னிவையுரைத்து
தோணு மழகுஞ் சொல்மொழியுந் தானெழுத
துறவர் மனமகிழ்ந்து தோகைவள்ளி காணாமல்
அறவர் படமெழுதும் அத்தங்கே ளம்மானை
சிரத்தை யெழுதித் திருப்பாதந் தானெழுதி
கரத்தை யெழுதிக் கண்ணெழுதி வாயெழுதி
கொண்டை குழலெழுதிக் கொங்கை நுதலெழுதி
கெண்டை வயிறெழுதி கிளிமொழியாள் சொல்லெழுதி
பல்வரிசை தானெழுதிப் பாத விரலெழுதி
வெல்லுந் துடைபிடிபோல் மெல்லிய லிடையெழுதி
வதன மெழுதி வடிவெழுதி மார்பெழுதி
மதன மறுவெழுதி வாயழகு தானெழுதி
தேமற் சுழியெழுதி தேக வுறுப்பெழுதி
காமக் கலையெழுதிக் கையில் விரலெழுதி
அங்க மெழுதி அடிவயிறு தானெழுதி
மங்கை நிதம்பமுடன் வளருந் தொடையெழுதி
காதும் நகமும் கணக்கின் படியெழுதி
ஓது முதுகெழுதி உந்திச் சுழியெழுதி
கண்ட மெழுதிக் கழுத்தெழுதி மூக்கெழுதி
தண்டை மணியெழுதி தாவடந் தோடெழுதி
ஆடை யுடையெழுதி அலங்காரந் தானெழுதி
வேட மடவாரை மெய்ய ரெழுதியபின்
பார்த்தார் மகிழ்ந்தார் பாவனைகள் சொல்லலுற்று
வேர்த்தா ருயர்ந்தோர் வேலாவென நினைந்து
பந்தோ குமிழோ பாவையிரு தனங்கள்
விந்தைபெறு முத்தணியோ மெல்லியவள் பல்வரிசை
பூகமர வட்டோ பொற்கொடியாள் கண்டமது
நாக படமொக்கும் நாரியவள் தன்னிதம்பம்
முகிலிருளை யொக்கு மொய்குழலாள் கூந்தலது
ஒயிலைரதி எனலாம் ஒளியைக் கதிரெனலாம்
மாதுநுதல் மூன்றாம் வடிவுபிறை யொக்குமென
பாதமது புத்தகத்தின் பாவனைபோல் காணுதிங்கு
இலையை நிகர்க்கும் எழுதும் வயிறுதுதான்
கலையிற் சிறக்குங் கண்டத் தழகிதுவே
வாழைக் கடங்குதொடை வதனம் பெருமதியாம்
சூழுங் கரும்புத் துண்டதுபோற் கையிதுவே
கண்ணை நிகர்க்கும் கயலின் விழியிதுவே
எண்ணரிய பெண்ணுருவம் எடுத்தே எழுதலுற்றேன்
என்றார் மகிழ்ந்தார் இறைவா வெனத்தொழுது
நின்றார் புகழ்ந்தார் நேரிழையின் தன்னருகில்
வந்துநின்று மாமுனியும் வள்ளிதனைப் பார்த்து
சிந்தையுற நோக்கிச் செப்புவா ரோர்வசனம்
மானீன்ற கன்னியரே வனத்தி லிருப்பதென்ன
தேன்போன்ற சொல்மொழியைச் செவியார நான்கேட்டு
நாடியிங்கு வந்தேன் நல்லதினை மாவெனக்கு
தாடியென்று கேட்கத் தையல்மிகக் கோபமுற்று
புனந்தனிலே நிற்பீரேல் பொல்லாங்கு செய்வனென்று
சினந்தாளே வள்ளி சிரித்தாரே நாரதரும்
கண்டு வெகுண்ட கன்னியரைத் தான்நோக்கி
அண்டம் புகழ்முனி அரிவையர்க்கு மேலுரைப்பார்
கண்ணுக்குட் கண்ணே கந்தர்தனக் கேற்றமின்னே
பெண்ணுக்குட் பெண்ணான பேதையரே சொல்வேன்கேள்
மடவார் குழலே வனவேடர் நாயகமே
திடமாக விப்போ சினந்தே னதட்டுகிறாய்
என்று முனிகூற இளங்கொடியாள் கண்சிவந்து
நின்றா லுமக்கு நீட்டூரம் நேரிடுங்காண்
அண்ணமார் கண்டால் ஆக்கினைகள் செய்திடுவார்
திண்ணமுடன் மாமுனியே செல்லுமென்றாள் மெல்லியளும்
அப்போது நாரதரு மரிவைமுழு ரூபமதை
செப்பமுட னமைத்துச் சென்றார் பழனிதனில்.