முருகன் App
கதிர்காமத்து அம்மானை
முருகவே ளுதிக்க3 / 18
கதிர்காமத்து அம்மானை

முருகவே ளுதிக்க

5விருத்தம்✓
முருகவே ளுதிக்க வேநல் முக்கண்ணன் விழித்தவாறும்
திருமகள் மைந்தன் றானும் தேவர்க்காய் அழிந்தவாறும்
பொருதிரைக் கடல்கள் சூழ்ந்த புவியிலே சூரர்தம்மை
கருதியே குகன் செயித்த கதைஎலாம் பகரலுற்றேன்.
6நடை✓
முன்னாளிலே சூரர் மூவுலகும் தானாண்டு
கண்ணாயிரத் தோனைக் கடுஞ்சிறையில் வைத்தார்கள்
வேத மழித்து விண்ணவரைத் தான்பழித்து
வாது கொடுத்து வாழ்ந்திருந்தார் சூரர்களும்
ஆதலால் தேவரெலாம் அவுண ரிடுக்கமதை
ஏதனால் மாற்றி இருப்போ மெனநினைந்து
இந்திரனுந் தேவர் இருடிகளு மாமுனியும்
சிந்தைநொந்து மாலயனார் சீர்பாதம் போற்றிசெய்து
ஆறாத் துயராய் அழுதழுது கைகூப்பி
மாறாத் துயர்நீக்கும் வல்லவர்கள் நீங்களல்லோ
கொடியதொரு தீமையெலாங் கோவிந்தா நீதுரத்தி
அடியவரைக் காக்க அருளுதவு மென்றுரைத்தார்
அஞ்சலென்ற தேவர்களை அரியு மயனாரும்
வஞ்சமுடன் வந்தகுறை வழுத்துமென வுரைத்தார்
மாலோ னுரைகேட்டு வானவரு மிந்திரனும்
நாலு முகத்தோனே நாரணனே கேட்டருளும்
வாரி துயிலாக வடமேரு குடையாக
சீரிலங்கு மாநகரில் சேரவுணர் தீவினைதான்
ஆற்ற முடியாது அசுர ரிடுக்கணது
சாற்றறிய மாயவனே தாபரித்து ஆளுமையா
கார்க்கப் படைக்கக் காவலர்கள் நீங்களல்லோ
ஆர்க்கு மரிதாகுமென்று அபயமிட மாலயனும்
தேவர் தனைப்பார்த்துத் திருமாலும் வேதாவும்
மேவலரே உங்கள் வினைஅகற்றி வைத்திடுவோம்
பிஞ்சு மதிசூடும் பெருமா னிடமேகி
அஞ்சாதீர் நாங்கள் அவுணர்களை வேரறுப்போம்
வாருங்கள் நாமெல்லாம் மாதுமையாள் பாகனிடம்
சேருவோ மென்று தேவர்குழாங் கூடினராம்
சீராகக் கூடிச் சிறக்கக் குழாமிருந்து
பேராக நன்மொழிகள் பேசுவுற்றா ரம்மானை
திருமா லிமையோர்க்குச் செப்புவது ஆதிசிவன்
கருவா லழிப்பதல்லால் காசினியிற் சூரர்களை
விழியா யிரத்தோனே மேவலரே கேட்டிடுவீர்
பழிவாங்க வேணுமென்றால் பரமன் தவமழிப்போம்
என்னத் திருமா லிமையோ ரடிபணிந்து
உன்னையல்லால் வேறுதுணை ஒருவரு மில்லையென
தாமன் மனமகிழ்ந்து சத்தியுமை பாகனிடம்
காமனைத் தானனுப்பக் கருதலுற்றா ரம்மானை
ஆதி மதனை அழைத்துச் சிவனிடத்தில்
மாது வடிவாக்கி மயக்குமென விடுத்தால்
வீரமது சிந்த விளங்கு மொருமதலை
சூரர்குலம் வேரறுத்துத் தொலைக்குமிந்தப் பிள்ளைஎன்று
ஆலோ சனையாய் அரிஅயனுந் தேவர்களும்
வால மதனை வாவென் றருகழைத்து
பெண்களுக்கு மேலான பேர்வடிவு நீறெடுத்து
கண்மூன் றுடையோனைக் கலைக்க வெனவிடுத்தார்
அப்போது காமன் அரிவை வடிவாகி
செப்பரிய ஈசரிடம் செல்வே னெனநடந்தான்
கரும்பு வில்வளைத்துக் கருவண்டு நாண்பூட்டி
அரும்பு மலர்ப்பாண மெடுத்து நடக்கலுற்றான்
வெண்கயிலை சென்று விமல னெதிராக
பெண்வடிவு கொண்டு பெய்தான் மலர்ப்பாணம்
மாரனவன் தானும் மாதுவடி வானசெய்தி
கூரான வேல்விழியீர் கூறக்கே ளம்மானை
குமிழைப் பழித்ததனங் கொடியைப் பழித்தஉரு
கமழைப் பழித்தமனம் கயலைப் பழித்தவிழி
மயிலைப் பழித்தசாயல் மதியைப் பழித்தநுதல்
முகிலைப் பழித்தகுழல் முறுவைப் பழித்ததிறம்
கரும்பைப் பழித்தகரம் கதிரைப் பழித்தநிறம்
அரும்பைப் பழித்தமறு அரவைப் பழித்தகுறி
இலையைப் பழித்தஉந்தி இணையைப் பழித்தபதம்
சிலையைப் பழித்ததுபோல் சேடியுரு வானமதன்
அன்றிலது போல்நடந்து அரனா ரெதிராக
நின்று உலாவி நிலைகுலைந்தான் காமனுந்தான்
கங்கை அணிந்தோனும் கலங்கி விழித்திடவே
மங்கை வடிவான மன்மதனுந் தானெரிந்தான்.