கதிர்காமத்து அம்மானை
திமிரமே யகன்று17 / 18
கதிர்காமத்து அம்மானை
திமிரமே யகன்று
33விருத்தம்✓
திமிரமே யகன்று ஞான தீபமே செழித்த தப்போ
அமிர்தமென் றறிந்து நான்கு திசைகளை யாய்ந்த போது
குமிரத கொடிக ளாகக் குன்றினி லிலங்கி மேவச்
சமிதவ முடைய யோகர் சார்ந்தனர் பதியி லன்றே
34நடை✓
வேர்த்துக் களைத்து வேலா வெனநினைத்து
பார்த்து மகிழ்ந்தார் பத்தன் சமாதிதன்னை
உருவுந் திருவும் உற்றெழுந்த ஞானவிழி
கருவு முடலுங் கலந்துவினை மாற்றுவராய்
சிந்தை மகிழச் சேர்ந்தாரோ வுன்பாதம்
வந்தா ருகந்தார் வாழ்கதிரை மாபதியை
பரிதிமணி யானைநிலம் பாவிசைத்துப் பாடினதால்
கருதி யுமதுபதக் காட்சி கொடுத்தீரே
முன்னாட் குறுமுனிவர் முத்திபெற வேண்டியவர்
தென்னகரஞ் சென்று தென்கயிலை மாநகரில்
சேர்ந்தோர்க்கு முத்தி திடமாய்க் கிடைக்குமென்று
கூர்ந்து அகத்தியனார் கூறயான் கேட்டிருப்பேன்
அறுமா முகனே அடியார்க் கெளியோனே
சிறுவ னடியான்நான் செய்தபிழை அத்தனையும்
மன்னித் தருளுமையா மயில்மீதி லேறியெந்தன்
முன்னின் றருள்புரிவீ ரென்றுவிழி மூடியபின்
கலைகள் சிறந்திலங்கக் கந்தரும் வள்ளியரும்
மலைமே லிருந்து மகிழ்ந்துமொழி பேசுவதும்
எட்டு வடுகனொடு எண்ணரிய தேவகணம்
பட்டுப் பணிசெய்து பாவனையாய் நிற்பதையும்
வரையேழ் மகிழ வனமெல்லாம் பூத்துதிர
தரைகள் மகிழ்ச்சியுறத் தான்கண்டார் ஞானமதால்
கண்டு விழித்துக் கைகூப்பி வாய்புதைத்து
என்று மகலேன் இப்பதியை விட்டேயான்
குற்றமது செய்தாலும் கொடுங்குற்றஞ் செய்தாலும்
முற்றும் பொறுத்து முத்தி எனக்களிப்பீர்
வாதாடுஞ் சூரர்களை வடிவேலால் மாய்த்தவுன்றன்
பாதாரம் நான்பணிந்தேன் பரமகதி தாருமிப்போ
உந்தனைத்தான் தேடி ஓடியிங்கு வந்தேனென்று
சந்தேகம் வையாமல் தாரு முமதுபதம்
காண நினைந்துவந்தேன் கடையேற வேணுமென்று
தோணுவா யென்னெதிரே சோதியுரு வத்துடனே
மங்குலிந்த நற்பதியின் வளைந்து மதிலாக
எங்குஞ் சிறந்தே யிலங்குவதைக் கண்டவுடன்
போகேன் பழனிதனில் பொற்கொடியாள் தெய்வானை
வேகமுற்று என்மேல் வினையேவும் நேரமதில்
தோகை மயிலேறித் தோன்றியந்த மாதுமுன்பு
ஏக வொளியாகி இப்பதியில் கொண்டுவையும்
பாவியெவ ராகிலுமிப் பதியிலே தானிறந்தால்
ஆவிதனிற் கலந்தே யாளு மடியாரை
வையமதில் மானிடர்கள் மாயையதிற் பட்டுழன்று
செய்யாத பாவமெல்லாஞ் செய்தோர்க ளானாலும்
தென்கயிலை சென்று திருப்பதியி லேமிதித்தால்
முன்செய்த பாவவினை முற்று மழிந்திடச்செய்
காணவரி தாகுதென்று காதாரக் கேட்போர்க்குப்
பேணியவ ரிப்பதியைப் பெறவே யருள்புரிவாய்
கந்தன் கடம்பனென்று கதிரைப் பதியடைந்தால்
உந்தன் பதவி யுடனே கிடைக்கவையும்
துரித மெழுந்து தொடராம லிப்பதியில்
பரிதி யெதிர்நின்ற பனிபோ லகலவையும்
அறங்கள் துலங்கிவர அதர்மங்கண் டேயகல
திறங்க ளொடுசித்தர் சேர்ந்துமுத்தி பெற்றிடவும்
வள்ளி மணவாளா வாழ்கதிரை வேலோனே
புள்ளி மயிலேறும் பூவையிரு பங்காநீர்
அந்தரமாய் நின்று அவனியெல்லாங் காப்பவனே
வந்து பணிந்தோர் வாழ்வர மீயுமையா
எவ்வுலகுங் காணே னித்தலம்போல் மெய்த்தலத்தை
ஒவ்வுங் கயிலையென்றால் ஒத்துவரு மென்றடியான்
சிறந்து விளங்கும் தேவ ருவந்திருப்பார்
நிறைந்த புவியலுள்ளோர் நீள்தவங்கள் செய்துநிற்பார்
அற்புதங்க ளெல்லாம் அநேகம் மகிழ்ச்சியுற
நற்பதிதா னென்று நரர்கள் துதித்திடவே
காட்சி கொடுத்துக் கதிரைப் பதிசெழிக்க
தீட்சை யெனக்களிப்பீர் செந்திவடி வேலவனே
பொற்பதியைக் கண்டவுடன் போகேன் பழனிமலை
சொற்பயிலுந் தெய்வானை துன்பமது எந்தனுக்கு
செய்யாமற் காருமுந்தன் சீர்பாதம் யான்மறவேன்
கையா யுனக்கபயம் கடம்பா வுனக்கபயம்
ஏழு பிறப்பி லெத்தீமை செய்தாலும்
வாழுங் கதிர்காமம் வந்தா லகலவையும்
எதிர்வினையால் வாடி இடறிவிழும் வேளைதன்னில்
கதிரைவே லென்றாற் காத்துரட்சித் தாளுமையா
காலன் முடுகிக் கரும்பாசம் வீசையிலே
வேலா வெனநினைந்தால் வெருண்டுயம னோடவையும்
சிங்கமொடு யாளி சினத்த கரடிபுலி
பங்கமது செய்யப் பழிகொள்ளும் வேளையிலே
எண்ணியுமைத் துதிக்க இடையூ றகற்றிவிட்டு
நண்ணிவந்து உந்தன் நற்பதியிற் சேரவையும்
சர்ப்பமொடு யானை தாரில்விஷ ஜெந்தெதிர்த்தால்
அற்புதமா யங்குசென்று அடியவரைக் காத்தருளும்
இரவிமதி யுள்ளளவும் இப்பதியே தான்சிறந்து
வரவே கிருபைசெய்து வைப்பாய் வடிவேலா
கனவிலும் மாணிக்கக் கங்கையென நினைந்தால்
வினையி லுழலாமல் விடையளித் தாளுமையா
உகத்துக் கலியன் உதித்துத் திருப்பதியின்
மிகுத்த கருணைகளை விடாது பறைத்திடினும்
மகத்துவங்கள் கொள்ளவையும் வாழ்கதிரை மாநகரை
செகத்தோர் துதித்திடுவார் திருவிழாச் செய்திடுவார்
மாசு படராமல் வையுமையா இப்பதியை
தேசமனிதர் வந்து தினந்தினமும் தான்தொழுவார்
கண்பா ருமது கருணைதனைக் கொடுத்து
நண்பரெவ ராகிலுமிந் நற்பதியி லேமிதித்தால்
பாவ வினையகன்று பரகதிகள் பெற்றிடவே
தேவ கணமாக்கிச் சேருஞ் சுரருடனே
என்றுதிரு முத்துலிங்கர் இவ்வரங்கள் கேட்கையிலே
கண்டு மனமகிழ்ந்து கந்தரும் வள்ளியரும்
பிரசன்ன மானார்கள் பெருந்தவத்தோன் தன்னெதிரே
சிரமதனில் கைகூப்பிச் செந்திவடி வேலவரை