கதிர்காமத்து அம்மானை
ஒலியர்க ளுழவர்7 / 18
கதிர்காமத்து அம்மானை
ஒலியர்க ளுழவர்
13விருத்தம்✓
ஒலியர்க ளுழவர் செட்டி ஓதிய மறையோர் வேந்தர்
வலியவ ரெனவே சேர்ந்து வரைபக வெறிந்தோன் றன்னை
நலியவே அடிய ராகி நாடியே தவங்கள் செய்யக்
கலியுக வரதன் றானுங் காட்சிக ளளிக்க வந்தார்.
14நடை✓
பூலோக மீதிற் புகழ்பெற் றடியார்
வேலா வெனக்கூவி மேவித் தவமிருந்து
அத்தனதைக் கண்டு அடியார்க்கருள் கொடுக்க
பக்தியோடு கந்தர் பழனிதனில் வந்தனர்காண்
செந்திவடி வேலவரும் தெய்வானை அம்மனுந்தான்
வந்து பழனிதனில் வாழ்ந்திருந்தா ரம்மானை
செந்நெல் செழித்து சிறந்து வளர்ந்தோங்க
அன்ன முலாவுநதி அதனில்மலர் பூத்திலங்க
முனிவர் தவம்புரிய மூவுலகும் தான்வாழக்
கனிகள் நிலத்துதிரக் காமனுயிர் பெற்றெழும்ப
குருகினங்கள் தான்செழிக்க குயிலினங்க ளோசையிட
பருதிமதி சிறக்கப் பாவாணர் பாட்டுரைக்க
திக்கெட்டும் ஆலயமுந் திசைநான்குந் தீர்த்தநதி
மைக்கட் டுடைய மயிலினங்கள் தானாட
தெங்கு கமுகு தேமாங் கதலிகன்னல்
பாங்குடனே தேன்சொரிந்து பழனிதனிற் பெருகும்
கொண்டல் குளிர்ந்தசையக் கொடியுயர்த்த நீர்வரந்தி
அண்டர் அறிந்து அகமகிழ்ந்து கொண்டாடி
இமையோரும் மாலயனும் இந்திரரும் மாமுனியும்
அமைய ஆறுமுகற்கு ஆலயமுந் தானியற்ற
தங்க நிலத்திற் சந்தனத் தூணிறுத்தி
துங்கவளை ரத்தினத்தால் தொடுத்துமுத்தால் வேய்ந்தபின்பு
மாணிக்கப் பீடமிட்டு மரகதத்தால் தாழுமிட்டு
ஆணிப் பொன்னாலே அழகாய் அலங்கரித்து
உரகமணி முகப்பாம் உள்மதிலும் வச்சிரமாம்
கிரகமதைத் தேவர்கண்டு கேதாரமென் றுரைத்தார்
ஆடினார் பண்ணவர்கள் அறுமுகனைத் தான்துதித்து
கூடினார் விண்ணவர்கள் கும்பிட்டார் தெண்டனிட்டார்
சூடினார் சேய்பதத்தைத் தொழுது நமஸ்கரித்து
பாடியே புத்தேளிர் பாவையொடு வேலவரை
கோயில் தனிலிருத்தி கும்பிட் டடிபணிந்து
தாயுநீ தந்தையும்நீ தற்காத்த தெய்வமும்நீ
தீரறப் பகைதீர்த்த தெய்வானை கேள்வனும்நீ
கூரான வேலேந்தும் குமரனென வணங்கி
மேலவர்கள் பூசைசெய்து விண்ணுலகஞ் சேர்ந்தார்கள்
மாலோன் மருகன் வாழ்ந்தார் பழனிதனில்
அமரருக்காய் வேலேந்தி அவுணர்குலம் வேரறுத்த
குமர குருவான குழந்தைவரக் காணாமல்
சஷ்டி விரதம் தான்படிக்க மாதுமையும்
திட்டமுடன் மாலயனுந் தேவர்களு மிந்திரனும்
அயிரா வதத்தினரும் அறுமுகனுந் தேவியுடன்
கயிலாய மேகக் கருத்துற்றா ரம்மானை
அவரவர்கள் வாகனமும் அவ்வவர்கள் பொன்ரதமும்
கவரி அரம்பையிடக் கயிலாயஞ் சென்றார்கள்
பவனி வரவுகண்டு பார்வதியு மீசுரனும்
மவுனமுடன் வேலவரைத் தானணைத்து முத்தமிட்டு
பாலா வுனது பாரிதெய்வ யானைதனை
வேலா மணந்து மேலோரைக் காருமென்று
நாரிபாகனைத் தொழுது நமதுதிரு வேலவர்க்கு
பாரியிவ ளொக்குமென்று பகர்ந்தனர்கா ணம்மானை
வாழ்த்திச் சிவனுமையும் மருமகளைத் தான்தழுவி
கார்த்திகே யன்றனக்குக் கண்ணொளியாய் நின்றவளே
உருவைப் பழித்த ஒண்டொடியே தெள்ளமுதே
திருவைப் பணிந்து செல்லுங்கோ நற்பழனி
என்ன இருவர் இளங்கிளியும் வேலவரும்
வன்ன மயிலேறி வந்தார் பழனிதனில்
கண்ணனயன் இந்திரனுங் காமனொடு தேவர்களும்
தன்னகரஞ் சென்று தானிருந்தா ரம்மானை
எங்கும் பழனிதனில் எண்ணரிய ஆலயமும்
பொங்கு நதிவிளங்கப் பூசைகளுந் தானடக்க
முனிவர் தவம்புரிய மும்மூர்த்தி தேவரொடு
பணிகள்செய்து நிற்பார்கள் பாருலக மீடேற
திண்புயத்தோர் போற்றத் தேவர்கதி பெற்றிடங்க
முன்புநான் வள்ளிசேதி மொழிவே னெனவுரைத்தேன்
ஆதலால் இப்போது அறைவேன்யா னிச்சரிதை
பூதலத்தி லுள்ள புதுமைகே ளம்மானை.