கதிர்காமத்து அம்மானை
வரன்போகி தனயன்வில்லி2 / 18
கதிர்காமத்து அம்மானை
வரன்போகி தனயன்வில்லி
3விருத்தம்✓
வரன்போகி தனயன்வில்லி வடுகனார் கடம்பன் மாரன்
தரன்பெறு சோமன்தேவி சசிதனைப் போற்றி யானும்
உரம்பெறு முரசுந் தூக்கும் உலகம தனிலு யர்ந்த
அரன்பதம் போற்றி இந்த அம்மானை பாட லுற்றேன்.
4வரலாறு✓
சீரார் புவியிற் திருப்பதிதன் செய்திசொல்ல
காரானை மேனிக் கணபதியே முன்னடவாய்
ஆதிசிவன் மரபில் அறுமுகனார் உற்பவித்த
காதை உரைக்கக் கற்பகமே முன்னடவாய்
வனத்தில் மயிலாட வான்கோழி கண்டிருந்து
கனைத்துநின்று ஆடுங் கதைபோல யான்தானும்
இந்தப் பெரும்புவியில் இளையோனு மிக்கதையை
சந்தப் படுத்தத் தகுமோ கலைஅறியான்
பாரி லெறும்பினங்கள் பாங்காய்ச் சமுத்திரத்தை
வாரிக் குடிப்பனென்ற வாறொக்கு மம்மானை
கற்றறியான் கூறும் கதிர்காமத் தம்மானை
முற்றறிந்து ஓதுவர்போல் மொழிவேனோ பூவுலகில்
பாவிசைத்துப் பாடிப் பயனெடுத்துச் சொல்லறியான்
நாவசைத்துப் பாட நாடினனோ மானிலத்தில்
வல்லவன் யானென்று வாழுமிந்த நற்பதியை
கல்லாதான் கற்ற கவிபோல யான்தானும்
முதுமொழியைக் கேட்டு மூவுலகோர் தான்மகிழும்
பதிமகிமை கண்டு பகரலுற்றே னம்மானை
புரந்தரனு முன்னாள் புகழுமிந்தச் சன்னிதியை
சிரந்தெளிந்து பாடச் சென்றேனோ பூவுலகில்
பகவன் மதத்தினர்கள் பாடிப் பணிந்தாறு
முகவன் திருப்பதியை மொழியத் துணிந்தேனோ
குரோத னுறையக் கும்பமுனி தான்துதிக்கும்
வரதன் திருப்பதியை வாழ்த்த நினைந்தேனோ
கடம்பன் மகிழ்ந்து காட்சிதரு மிப்பதியை
இடும்பனென நினைந்து இயற்றத் துணிந்தாலும்
மாரன் குமரன் மாசாத்தான் சண்டனையும்
காராய் எனநினைந்து கலைவாணர் தங்கள்முன்னே
தேடரிய தெய்வத் திருப்பதியை யான்நினைந்து
பாடத் துணிந்தேனே பாவலர்கள் தஞ்சமென்று
மானினங்கள் சூழ மயிலினங்கள் தான்வளர
தேனினங்கள் எங்குந் தெளித்துச் சிறந்திருக்க
குயிலினங்கள் கூவக் குஞ்சரங்கள் தான்பெருக
பயிலுங் கிளியினங்கள் பாங்காய்ப் பெருக்கமுற
வண்டினங்கள் ஓசையிட வாசமலர் பூத்திலங்க
தென்ற லசைப்பத் தெய்வத் திருப்பதியில்
மாணிக்கக் கங்கை வளைத்து மிகச்சூழ
ஆணிப்பொன் னாலமைத்த அலங்காரச் சன்னிதியில்
வரந்தி அபிராமி மாதா அரிப்பிரியை
சுரந்த சசியந்தன் சூலி அரம்பையுடன்
கந்தவே ளைத்தொழுது கதிர்காம மென்றுசொல்லி
வந்து பணிசெய்து மகிழ்ந்திருந்தா ரம்மானை
எழுமலையுந் தான்சிறக்க இமையோர் பணிந்துதொழ
கழுகு பணிசெய்யும் கதிர்காமச் சன்னிதியில்
கன்னல் கதலி கமுகுபலாத் தெங்கினொடு
செந்நெல் செழித்திலங்கும் திருப்பதியி லெந்நாளும்
அண்டர் துதிக்க அருள்பெருகி வாழ்வுயர
தொண்டர் தவம்புரிந்து சூழ்ந்திருப்பா ரம்மானை
யாளி-சிங்கம் மேவ யானை கரடி-புலி
தூளிதங்கள் செய்யாமல் தொடர்ந்துவிளை யாடிடுமாம்
கிள்ளையொடு பூனை கீரியொடு நாகசர்ப்பம்
துள்ளி விளையாடிச் சூழ்ந்திருக்கு மிப்பதியில்
முல்லை வனமும் முழுநீலஞ் செண்பகமும்
சொல்லரிய மாமலர்கள் சூழ்ந்து வளர்ந்தோங்கும்
சந்திரருஞ் சூரியருந் தானவரும் வானவரும்
இந்திரனு மாமுனியும் இறைஞ்சித் துதித்திடுவார்
அரியு மயனும் ஆதிசிவன் நந்தீசர்
பிரியமுடன் உகந்த பெருந்தலங்கா ணம்மானை
பார்வதியும் லெட்சுமியும் பாங்கான கங்கையொடு
வார்அணிந்த தேவநிலை மங்கையர்கள் தானிருக்க
தேடரிய இப்பதிக்குத் தென்கயிலை யாமெனவே
மாடேறு மீசன் வகுத்தாரே முன்னாள்இல்
அப்பதியை யான்தானும் அம்மானை யாய்ப்பாட
ஒப்பிடுமோ பூவுலகில் ஒன்று மறியேனே
கலையிற் சிறந்தோரைக் கைகூப்பி யான்தானும்
மலைகள் செழித்திலங்கும் வாழ்கதிரை மாநகரை
பாடிப் படித்துப் பண்டுவினை தானகற்ற
தேடித் தவம்புரிந்து செப்பலுற்றே னம்மானை
நாலு மதத்தோரும் நாவலரும் பாவலரும்
மாலு மயனறிய வணங்குந் தலமிதுகாண்
மங்கமுடிக் கோபுரமும் சந்தன மாமலையும்
எங்கும் புகழாக இலங்குமிந்தச் சந்நிதியில்
வெள்ளிமுள்ளுக் கானகமும் வெண்ணீற்று மாமலையும்
வள்ளிக் கொடிவளர வாழ்கதிரை மாநகரில்
மாங்கனியும் வாழை வருக்கனன்ன தாழையுடன்
தேங்கனியுஞ் சூழ்ந்து செழிக்குமிந்தச் சந்நிதியில்
ஆலு மரசும் அடர்மருது வம்மியுடன்
சோலைஎன வளர்ந்து சூழ்ந்திருக்கு மம்மானை
அல்ல லறவே அரும்வினைகள் தானறவே
சொல்லுங்கதிர் காமமென்று சொற்பெறவே யான்பாட
துவன்ற நடையாளே சொற்கலையில் வல்லவளே
தவன்ற திறத்தாளே சரஸ்வதியே முன்னடவாய்
தெரிந்து கலைபடித்த செந்தமிழோர் தங்கள்முன்னே
அறிந்து கதிர்காமத் தம்மானை சொல்வதுதான்
மாறில்லா நீள்புரியில் மாரி பொழிவதுமுன்
பேறில்லா நீள்பனிதான் பெய்ததொக்கு மம்மானை
ஆகையால் யானுரைத்த அம்மானை தன்னைஇப்போ
தாகமுடன் கேட்போர் தரணிதனி லேவாழ்வார்
என்னபிழை யானாலும் இதையே மனமகிழ்ந்து
சொன்னேனே கேட்போர் சொர்க்க மடைந்திருப்பார்
பேசறியான் சொன்ன தமிழ்ப்பிழை களைப்பொறுத்து
ஓசைபெற வாழ்ந்து உகந்திருப்பீ ரம்மானை
இந்தமட்டு மிப்பதியை எடுத்தே யுரைத்ததெல்லாம்
கந்தவே ளுற்பவித்த காதையொடு முற்சரிதை
ஓத உவந்து உளங்களிக்கப் பூவுலகோர்
பாதம் பணிந்து பாடலுற்றே னம்மானை
ஏதுகுற்றஞ் செய்தாலும் எளியேன் தனைக்காத்து
வாது புரியாமல் வடிவேல ரைத்தொழுவோம்
சித்திபெற எண்ணித் திருப்பதியை யான்நினைந்து
பத்தியொடு படிக்கப் பாட மனந்துணிந்தேன்
மானீன்ற கன்னி வள்ளியம்மை தானிருக்கும்
தேன்போன்ற மாநகரில் செல்வக் கதிர்காமம்
வள்ளிக் கிருதோழி வனவேடர் கற்சூழ
புள்ளிமா னீன்றசெய்தி புகல்வேன்பின் அம்மானை.