கதிர்காமத்து அம்மானை
சரவண பவனும்13 / 18
கதிர்காமத்து அம்மானை
சரவண பவனும்
25விருத்தம்✓
சரவண பவனும் வள்ளி தன்னையே நோக்கி யெந்தன்
விரகமே தீர்ந்த திப்போ மேலவ னிடத்திற் செல்ல
வரமது வளித்து நீரும் மகிழ்ச்சியா யிருப்பீ ரானால்
பரகதி பெறுவீ ரென்று பகர்ந்தனர் மனைவி யோடும்.
நடை✓
ஆடரவு தானணியும் ஆதிசிவன் மைந்தனுந்தான்
வேடமட வாருடனே விளம்புவா ரோர்வசனம்
தேனலரும் மாதுகுழல் தெய்வானை யம்மனுந்தான்
காணாமல் தேடிக் கதறுவாள் வள்ளியரே
வந்துவெகு நாளாச்சே வாழ்கதிரை மாநகர்க்கு
சிந்தை கலங்கியெந்தன் தெய்வானை தானழுவாள்
போக விடைதாரும் பொற்கொடியே மாதரசே
தாகவிடாய் போலத் தவத்தினர்கள் தேடுவரென்
றாறுமுக னீதுரைக்க அன்னநடை வள்ளியம்மை
சீறிச் சினந்தெழுந்து தெய்வானை யாருமக்கு
மனைவி யொருத்திஎன்றால் மறுதாரங் கட்டுவரோ
கனவிலுந் தாந்நினையார் காசினியோ ரானாலும்
அம்புவியோர் தங்களுக்கு அரிவை யிருவருண்டோ
நம்பினே னுன்னை நற்பதவி சேரவென்று
கானா ரிவையுரைக்க வடிவேலர் தான்மகிழ்ந்து
தேனே யுமக்குமொழி செப்புகிறேன் கேட்டிடுவீர்
முந்நா ளெமக்கு மும்மூர்த்தி தேவரெல்லாம்
மின்னார்தெய் வானைதன்னை விவாகம் முடித்தார்கள்
அந்தநாட் டொட்டு அவளாசை நான்மறவேன்
சிந்தை மகிழ்ந்தனுப்பும் தெய்வானை யாரிடத்தில்
மாசில்லா நீள்பழனி வாழ்நகர மாரணங்கே
நேசமொடு போய்வாறேன் நில்லுமென வுரைத்தார்
பச்சை மயிலேறும் பகவானு மீதுரைக்க
அச்சமில்லா வள்ளி யாரணங்கு மேதுரைப்பாள்
அழகில் மிகுந்தவளோ அண்ணமா ருள்ளவளோ
கிளையி லுயர்ந்தவளோ கீதம் படிப்பவளோ
என்னைப்போ லேயழகாய் இருப்பாளோ தெய்வானை
உன்னைப்போல் தந்திரியை ஒருவரையுங் கண்டறியேன்
தார மிரண்டானால் தாரணியில் மானிடவர்
வார மெனவென்று வகுப்பார்கள் யானறிவேன்
புத்தியில்லா வார்த்தை பொருத்திமிகப் பேசுகிறீர்
சத்தியமா யுன்னைத் தான்விடவும் மாட்டேன்காண்
போனர லுமக்குப் புறம்பாக நான்வருவேன்
ஆனா லிதுபாவம் அவள்வரட்டு மிவ்விடத்தில்
நாங்க ளிருபேரும் நன்மையா யுன்றனக்கு
பாங்குடனே தானிருக்கும் பாவனைகள் செய்திடுவோம்
ஒன்றா யிருந்துமக்கு ஊழியங்கள் செய்வேன்நான்
மன்றாடி னாலும் வாழ்பழனி போகவிடேன்
மாற்ற முருவாகி மரமாகி நற்புனத்தில்
தோற்றி எனையெடுத்துத் துயரப் படுத்துவதேன்
இந்தமொழி வள்ளிசொல்ல ஈசன் மகன்மகிழ்ந்து
சொந்தமோ நானுனக்குச் சோலிகள் செய்யாதே
உற்ற புகழுடைய ஓவியங்காண் தெய்வானை
சற்று மவளாசை தவிரேன்காண் மாதேகேள்
வாழும் புவியிலுனை மன்றல்செய்தேன் என்றறிந்தால்
நாளு மமரரென்னை நகைத்துப் பழித்திடுவார்
மங்கையரே கேளும் வாழுமந்த மாபழனி
சங்கையொடு போகவரந் தாருமென வள்ளியம்மன்
கோபித்துக் கண்சிவந்து கோபமுற்றுத் தானெழுந்து
தாவித் துரத்திடுவேன் தையல்தெய் வானைதன்னை
வரட்டு மவளிங்கு வாதாட வேண்டாங்காண்
திருட்டுக் கதைபிணைத்துச் செப்பாம லிங்கிருப்பீர்
சந்ததியை யான்வெறுத்துத் தளிர்வளத்தி லும்மோடு
வந்தே னெனமகிழ்ந்து வருத்துவதும் ஞாயமதோ
பெண்கட்டி என்றறிந்தாற் பிரியப்பட மாட்டேன்
கண்கட்டி வித்தையைப்போல் காட்டி எனையமக்கி
தந்திரமாய் என்னைத் தானணைய வேணுமென்று
சுந்தரமாய் வேடமெலாந் தொடுத்துப் பிணைத்தபின்பு
தட்டி எடுத்தீரே சங்கை குறைக்கவென்று
விட்டுப் பிரிந்தீரேல் விழுவேனிக் கங்கையிலே
உனக்குமதிப் பில்லாமல் ஒருபெண் இருந்திடவே
கனக்கப்பெண் வேணுமென்று கருக்குவது நீதியதோ
பழனி பழனியென்று பதறிமிகப் பேசுகிறீர்
கழனி நதிவந்து கலக்குமோ வேலவரே
மாணிக்கம் முத்து வைரம் வைடூரியங்கள்
ஆணிப்பொன் வெள்ளிதங்கம் அறத்திலுயர் ஈழமுடன்
செந்நெல் வரகு தினையெறுங்கு எள்ளுடனே
கன்னல் கதலி கமுகுபலாத் தெங்கினொடு
அரசு புன்னைவம்மி அத்திவன்னி யால்மருது
வரிசை வரிசையதாய் வகுத்திருக்க விப்பதியில்
நீதியில்லா நீள்பழனி என்றுமிகச் செப்புகிறாய்
கோதில்லா விப்பதியைக் குற்றமென்று பேசாதே
மானிடர் கூடிவந்து வணங்குவார் பார்த்திருநீர்
தேனடருஞ் சோலைத் திகழ்காந்தி சொல்லரிது
இப்பதியில் மாணிக்க மெங்கும் நிறைந்திருக்க
அப்பதிக் கேகவென்று ஆபத்துக் கொள்ளாதே
கதிரை மலையும் கதிர்காமச் சந்நிதியும்
பதியிரண்டுங் காணாதோ பழனிக்கேகன் போவதுண்டு
வைப்பாட்டி யார்காண் மனையாட்டி யாருமக்கு
எப்பாட்டி யானென்று எடுத்துரைப்பீ ரென்றழுதாள்
வாது புரியவள்ளி வடிவேலர் தான்பார்த்து
நீதியில்லா வார்த்தை நிகழ்த்தாதே மாதரசே
பொறுக்கவறி தாகுதுநீர் புகலும் மொழியதனை
வெறுப்பே னுனையினிநான் விளம்பாதே வீண்மொழிகள்
நிதியந்தா வென்றேனோ நிந்தனைகள் செய்தேனோ
நதியொன் றொழியஇங்கு நாலேழு நதியுமங்கு
இருக்கப் பழனிதனி லிலங்குமென்று வள்ளியர்க்கு
விருப்புற் றகமகிழ்ந்து விளம்புவா ரம்மானை
இந்திரனார் புத்திரியை இங்குவரச் சொல்லுகிறீர்
அந்தரத்தோ ரிங்கு அனுப்புவரோ ஆரணங்கே
சொல்லா மொழியைத் தோதகமாய்ப் பேசாதே
கல்லோதா னுன்மனது கரையாதோ இப்பொழுது
வேத மழிந்தாலும் விண்ணோ ரழிந்தாலும்
ஏதும் புகலாமல் என்னை யனுப்பிவிடும்
சொன்னமொழி தட்டாதே தோகையவள் தேடிடுவாள்
என்னை யனுப்பிவிடும் ஏகியிங்கு வாரேனென
இருவரும் தர்க்கமிட்டு இருக்குந் தருணமதில்
வரிவிழியாள் தெய்வானை வடிவேலர் எங்கேயென்று
தேடிப் பழனியெங்குந் தெரிவையரு மாத்திரமாய்
ஓடித் தவத்தினர்க்கு உற்றமொழி கூறிடுவாள்
முன்பொருநாள் நாரதரும் முக்கண்ணார் புத்திரரும்
அன்புடனே பேசி அகமகிழ்ந்தார் கண்டிருந்தேன்
அன்றுதொட்டின் றுமெந்த னன்பனைக் காணவில்லை
கொண்டுதரு வீரெனவே கும்பிட்டாள் தெய்வானை
மாமணியாள் கைகூப்ப மாணிக்க வாசகனார்
ஆமெனவே ஞாலமதால் ஆராய்ந்து பார்க்கலுற்றார்