கதிர்காமத்து அம்மானை
பண்ணவர் துணைவா10 / 18
கதிர்காமத்து அம்மானை
பண்ணவர் துணைவா
19விருத்தம்✓
பண்ணவர் துணைவா போற்றி பார்வதி மகனே போற்றி
விண்ணழ லொளியே போற்றி வினைகளைக் களைவாய் போற்றி
எண்ணரி தானாய் போற்றி இந்திரன் மருகா மூன்று
கண்ணவன் புதல்வா போற்றி கர்த்தனே போற்றி போற்றி
20நடை✓
ஐயா வறுமுகனே யண்டர்தொழு நாயகமே
வையமதி லோர்வனத்தில் மங்கையரைப் போலேதான்
வானுலகுங் காணேன் மண்டலத்திலுங் காணேன்
தேனுலவு மாதுகுழல் தென்றல்முகி லென்றிடலாம்
கன்னியவள் கழுத்தைக் கமுகவட்டுக் கொப்பிடலாம்
மின்னொளிபோல் வள்ளியர்தன் மேனியழ கெனலாம்
காரிகையார் தன்விழியைக் கயல்விழிக்கு ஒப்பிடலாம்
நேரிலவள் கரத்தை நிகழ்கரும்புத் துண்டெனலாம்
நாவெடுத்துப் பேசில் நற்கிளியின் சொல்லெனலாம்
கூவு மிசையைக் குயிலோசை யென்றிடலாம்
கூறுரிது மால்மருகா குறமாதின் பேரழகை
வேறொருத்தி யுந்தனக்கு வேண்டாங்காண் வேலவரே
கண்டால் மயங்கிக் கலங்கி விழுந்திடுவீர்
சென்றா லறிவீருன் சிந்தை மகிழ்ந்தணைவீர்
தெய்வானை யுந்தனுக்குச் சீரான பெண்ணுமல்ல
பொய்யாது ஐயாநீர் போயறிவீ ரென்றுமுனி
துதித்தா ரறுமுகனைத் தொழுதார் நமஸ்கரித்தார்
விதித்த குறமாதை விரும்புமெனப் பணிந்து
எழுதும் படத்தை எடுத்துமிக நாரதரும்
தொழுதுவேல் கைகொடுத்துத் துதித்தபின்பு மெய்யாவர்
நடந்தார் பொதியமலை நற்றவங்கள் செய்யவென்று
கடந்தார் பழனிவிட்டுக் கந்தருந் தென்னிலங்கை
பார்ப்பார் படத்தைப் பாவையிவ ளெவ்விடமோ
வேர்ப்பார் திகைப்பார் வேதனைகள் கொண்டிடுவார்
சிற்றூரைத் தேடித் தினைப்புனத்தில் வேலர்வர
மற்றுமிரு தோழியொடு மகிழ்ந்துவிளை யாடியபின்
வஞ்சி யெழுந்து வாழுந் தினைப்புனத்தில்
அஞ்சாமல் வள்ளியம்மை ஆலோல மென்றசத்தம்
வேலவனார் கேட்டு வேட ருருவாகி
சாலமொடு அம்புசிலை தானெடுத்து மால்மருகன்
கலைமானை யெய்துகுறை காயமெனத் தேடுவர்போல்
மலையிற்குற மாதேயொரு மானோடி வந்ததுண்டோ
கண்டீரே யானார் காட்டா யதன்கவட்டை
கொன்றுவிட்டா லுனக்குக் கொடுப்பேன்நான் பேர்பாதி
என்று முருகேச னிவ்வசனந் தானுரைக்க
நின்று வெகுண்டுவள்ளி நிந்தனையாய்க் கந்தருக்கு
வேடா உமக்குவிடை மெல்லியரோ சொல்லுவது
நாடாதே யிங்கே நடப்பாய் புனத்தைவிட்டு
தேடுங் கலைமானைத் தெரியில் வனத்தேகி
ஓடி யகன்றா லுயிர்பிழைப்பாய் வில்வேடா
நில்லாதே செல்லும் நின்றா லனர்த்தமுண்டு
பொல்லாங்கு செய்வேன் போடா புனத்தைவிட்டு
குறத்தி கொடிச்சியென்னும் குலம்பேசி யிவ்வனத்தில்
மறத்தி மதலையைப்போல் வாதுகொண்டு கேட்கவந்தீர்
மானிறைச்சி தின்னும் மடைச்சியென்று பேசுகிறீர்
தேனிருக்க மாவிருக்கத் தெவிட்டாக் கனியிருக்க
கண்டுனக்குச் சொல்லக் காரியமே தென்றுரைக்க
அண்டினேன் வள்ளியரே அணைந்து புணைந்திடுவீர்
தண்டையழகுந் தாவுங் குழலழகும்
கண்டவுடனே கலங்கி மயக்க முற்றேன்
கூடிக் குலவி குறமாதே செய்திடுவோம்
நாடியே யிவ்வனத்தில் நாமிருவர் வாழ்ந்திடலாம்
வாரு மிருபேரும் மருவி மகிழ்ந்திடுவோம்
தாரு மொருவாக்குத் தையலரே யெந்தனுக்கு
வேண்டினார் வேலவனார் வேகமுற்றாள் மெல்லணங்கும்
தூண்டினாள் கோபமதை சொல்லாத சொல்லுரைத்தாள்
காட்டிலே சென்று கலைமானை யெய்தனென்றென்
வீட்டிலே நின்று விளம்பா தகன்றிடுவீர்
அணுங்கு பன்றிதின்ற ஆணவமோ வுந்தனுக்கு
மணங்கொண்டு கன்னியரை மருவரச் செய்ததுகாண்
துஷ்டா வுனக்குச் சோலிவருங் கேலியதால்
கஷ்டப் படப்போறீர் கையில் கவணிருக்கு
வம்பாகே ளுந்தனுக்கு மமதையோ யிவ்வேளை
கம்பா லடித்துக் கலைப்பேன்நீ நில்லாதே
புனத்தி லிருக்குமிளம் பூவையரில் மோகமென்ன
மனத்தில் நினைத்ததெல்லாம் மாற்றி யகன்றிடுவீர்
வண்டாடுஞ் சோலை வாழ்கதிரை மாநகரில்
குன்றாமல் நாங்கள் குடிகொண்ட நாள்முதலாய்
தீது வந்ததில்லை திருமுருகர் தன்துணையால்
வாதுகொண்டு பேசுகிறீர் வந்தியோ நானுனக்கு
வள்ளி யிவையுரைக்க வடிவேலர் தான்மகிழ்ந்து
தெள்ளமுதே நீயுமிப்போ சேர்ந்தணைந்து முத்தமிடும்
பாவையரே யுன்னழகைப் பார்த்தால் மயக்கமது
தாவுதே வஞ்சியரே சஞ்சலத்தைத் தீருமடி
தெங்கின் குரும்பையெனச் சிறந்த தனத்தாளே
பங்குபெற்று சேர்ந்தணைந்தால் பரகதிநீர் சார்ந்திடுவீர்
புள்ளி மயிலேறும் புனிதனிவை யுரைக்க
வள்ளியம்மை தான்சினந்து வன்னக் கவணெடுத்து
எறிவேன் வனவேடா யிப்புனத்தை விட்டகலும்
அறியாயென் னண்ணர்வந்தா லடிப்பா ருனைத்துரத்தி
செப்பினாள் வள்ளியம்மை செந்திவடி வேலவரும்
தப்பாமல் வேங்கைமரம் தானானார் அம்மானை
அன்னநடை வள்ளி அம்மரத்தைத் தான்பார்த்து
என்ன புதுமையிது இப்புனத்தில் வந்ததென்று
பாங்கிமா ரோடுவள்ளி பகருமந்த வேளையிலே
வாங்குசிலை வேடர்தளம் வந்தார் புனத்தருகே
கண்டார் வெகுண்டார் கானப் பெருங்குறவர்
விண்டார் புதுமையென்று வினவினார் வள்ளியரை
தங்கையரே யிந்தமரம் தான்புனத்தில் வந்ததென்ன
மங்கையரே யுன்வதனம் வாட்டமுற்ற காரணமேன்
குறவர்கோ னிவ்வசனம் கூறவே வள்ளியரும்
முறையோ வெனப்புலம்பி மொழிவா ளொருவசனம்
அண்ணரே பாங்கியரோ டரியகிளி துரத்தி
திண்ணமுடன் நிற்கையிலே சிலைவாளி தன்னுடனே
மலைவேடன் தானொருவன் வந்து புனத்திலிப்போ
கலைஒன்றை எய்துவிட்டேன் கண்டீரோ என்றுரைக்க
சொல்லப் பயந்து துயரமுற்று யானிருக்க
பொல்லாக் கதைமொழிந்தான் போடா எனவுரைத்தேன்
வேடன் அகல வேங்கைமரம் ஒன்றுதுதான்
கூடம் எனவளர்ந்து கொண்டதுகா ணண்ணர்களே
இதுபுதுமை யேயொழிய ஏதும் புதுமையில்லை
கதிபெருக அண்ணருக்குக் கன்னியவள் தானுரைக்க
கேட்டுக் குறவர்தளம் கேவலங்கள் செய்தவனை
வாட்டுவோம் தங்கையரே வடிவேலர் தன்செயலால்
தளங்களொடு வேலநம்பி தங்கையரைப் போயிரென்று
வளர்ந்த திருமரத்தை வடிக்க வெனநினைந்து
கோடரி கத்திகொண்டு கூடிப் பெருங்குறவர்
சாடு மளவில் தானனர்த்துங் கண்டார்கள்
வேடர் ஒருமித்து வேங்கைமர மிவ்வனத்தில்
வாடாமல் நின்றால் வள்ளிக் குதவியென்று
பேசி யகன்றார்கள் பெரிய தினைப்புனத்தில்
ஆசையொடு தேன்தினைமா அருந்தவென நீர்குளித்து
வந்து பசியாற மரமான வேலவரும்
தந்திரமா யோர்கிழவன் தானானா ரம்மானை