முருகன் App
கதிர்காமத்து அம்மானை
சங்கரன் மைந்தா18 / 18
கதிர்காமத்து அம்மானை

சங்கரன் மைந்தா

35விருத்தம்✓
சங்கரன் மைந்தா போற்றி தாருகர் செற்றாய் போற்றி
மங்கையர் பாகா போற்றி மாலவன் மருகா போற்றி
கங்கைதன் மகனே போற்றி காமனை நிகர்த்தாய் போற்றி
எங்கணும் நிறைந்தாய் போற்றி இறைவனே போற்றி போற்றி
1900நடை✓
வீழ்ந்து நமஸ்கரித்து வேலோனே தெய்வானை
வாழ்ந்து கதிர்காமம் வந்திருக்க வையுமையா
வந்திருக்க வையும் வாழ்கதிரை மாபதியில்
செந்திருவே வந்தாற் செழிக்குமென்றா ரம்மானை
கேட்டவர மெல்லாங் கேசவனுந் தான்கொடுக்க
தீட்டும் விழியுடைய செல்வவள்ளி பாதமதில்
கும்பிட் டடிபணிந்து குமரவேள் கோதையரே
நம்பிக்கை யோடு நரர்தேவ ரிப்பதியில்
வருவா ரவர்களுக்கு வாழ்த்தி வரங்கொடுத்துன்
அருகாக வைத்திருக்க அருளுமென்றார் முத்துலிங்கர்
வள்ளியம்மன் கேட்டு வாழ்த்தி வரங்கொடுத்தாள்
துள்ளி யெழுந்திருந்து துலங்குங் கலையறிந்து
ஐந்தெழுத்தை யொன்றா யடக்கச் சிவமெழுந்து
கந்தவேள் தன்னுடன் கரந்ததுகா ணம்மானை
ஆவி யகன்று அறுமுகனா ரோடிருக்க
பாவ மகல்சடத்தைப் பக்குவங்கள் செய்தபின்பு
கொண்டாடி வள்ளியருங் குழந்தைவடி வேலவரும்
மன்றாடி முத்துலிங்கர் வாங்கும் வரங்கொடுத்தோம்
தேசந் தழைக்குமினித் தென்கதிரை ஈடேறும்
பாச மகலும் பசுபதங்கள் நின்றோங்கும்
குற்றாலங் காசி குருநாடு நற்பழனி
ஆற்றோடு வெண்கயிலை அரியவை குந்தமொடு
சேர்ந்த திருப்பதியோர் தென்கயிலை மாநகர்க்கு
நேர்ந்து வருவார்கள் நீள்தனங்கள் செய்யவென்று
முன்னா ளமரர்க்காய் மும்மூர்த்தி தான்கூடி
அந்நாட் சமுத்திரத்தை யகற்றி யவனியென
கின்னர்பிரான் தனக்குக் கிரீட முடிதரித்து
மன்னனென ஆளு மென்று வைத்தார்கள்
வேதத் துவிபம்என்னந் திருநாம மிட்டதென்று
பாவையெனும் வள்ளியொடு பகர்ந்தபின் வேலவரும்
மானேகேள் முத்துலிங்கர் வரத்தின் படியேதான்
நானே பழனியென்னும் நற்பதிக்குச் சென்றங்கு
அயிராணி ஈன்றவெந்தன் அரிவையை யழைத்து
மயூரமதி லேற்றி யிங்கு வரவே வரந்தாரும்
குழக னிரக்கக் குஞ்சிரிப்புக் கொண்டிருந்து
அழகுவள்ளி போய்வரவென் றடிபணிந்தா ளம்மானை
பத்தியுற்ற வள்ளியிடம் பாங்காய் விடைகொடுத்து
கர்த்தன் மயிலேறிக் கன்னியரைக் கொண்டுசெல்ல
பறந்தார் பழனியெனும் பதியில்வந்தார் கந்தருந்தான்
சிறந்தாள் தெய்வானை செட்டிதனைக் கண்டுமிக
போற்றிப் பணிந்து புனலாலே தான்கழுவி
சாற்றி நறுமலர்கள் சாமிதனை யாசனத்தில்
இருத்தியபின் தேகம் இளைத்ததென்ன உந்தனுக்கு
வருத்தியதார் சொல்லும் மாதுமையாள் புத்திரனே
மாதொருத்தி வைப்பாட்டி வைத்தீராந் தென்னிலங்கை
ஏதொருத்தி யிங்கிருப்பாள் என்றோ வந்ததுகாண்
நானுனக்குப் பெண்ணுமல்ல நாச்சிமா ரங்கிருப்பாள்
வீண்மடந்தை யென்றுஎன்னை விட்டுப் பிரிந்தீரே
தேவர் எலாங்கூடி தெய்வானை யம்மெனென்று
பூமாரி பெய்துமன்றல் புரிந்துவைத்த குற்றமதோ
சண்டனைபோல் நாரதனும் தட்டியுமை யெங்கனுப்ப
கண்டு கதைபேசிக் கனக்க மகிழ்ந்தீர்கள்
எந்தன் தலையெழுத்தை யாரோ டுரைத்தாலும்
வந்த விதியை மாற்றுபவ ராகுமுண்டோ
தந்தைஎனு மிந்திரனார் தானுமெனைக் காத்திடென்று
உந்தன் பதம்பிடித்த துணராமற் போனீரோ
இலங்கை தனிற்சென்று ஏந்திழையா ளோடணைந்து
கலங்கி யெழுந்துவந்த காரணம்போல் தோணுகுது
வேடர் குலமாதை விரும்பி யகன்றீர்நீர்
தேடாக் கனியா திரவியமா வக்குறுத்தி
நானொருத்தி யுந்தன் நாரி யெனவிருக்க
தேனே யவளாசை யென்று தெரிந்தலைந்தீர்
வதனமோ ராரும் வாடியுடல் மெலிந்து
விதனமொடு வந்தீரென வேலவருந் தான்மகிழ்ந்து
வாதுகள் கூறாரே வாருமிரு பேருமதாய்
ஓதரிய தென்கதிரை உற்றிருப்போ மம்மணியே
வாருமென்னத் தெய்வானை வடிவேலரைப் பார்த்து
நீருஞ் சுனையும் நிறைந்திருக்கும் மாநகரே
பெருமையொடு மிப்பழனி பேர்பெற் றிலக்கமுற
உரிமையற்றே யேக வொத்து வருமோதான்
ஓதென் றுரைக்க உற்ற கடம்பனுந்தான்
ஆதிசிவன் முதலாய் அமரர் கணநாதா
அட்டதிக்குப் பால ரானைமுகன் மாலயனும்
மட்டள வில்லாத வாழ்கதிரை மாநகரில்
குடிகொண்டா ரம்மணியே குகனேவல் செய்யவென்று
மடிகொண்டு தேவகணம் வரைமே லுலவுவதை
என்னென்று சொல்வேன் ஏழுமலை தன்சிறப்பை
முன்னின்று பார்த்தால் முத்துரத்ன மென்றுசொல்வீர்
சித்தர்முனி இருஷி சிறந்த சபையுமுண்டு
பத்தரொடு முத்துலிங்கர் பாங்காய்ச் சமாதிகொண்டார்
திங்கள் மும்மாரி செழித்துமிகப் பெய்வதுவும்
மங்கு லிறங்கி வரந்திதனை யள்ளுவதும்
துகினம் சிவலையெனச் சூழ்ந்திருக்கு நேர்மைகளும்
எகினக் குலத்தோர்கள் ஈட்டிவில்லோ டேகுவதும்
எல்லா மறிவீர் ஏகிவந்து பாருமென்றார்
பொல்லாங் குரையாமற் பொற்கொடியுஞ் சம்மதித்து
வந்தார் கதிர்காமம் வானவர்கள் கொண்டாடி
சிந்தை களிகூர்ந்து தெளித்தார்கள் புட்பமழை
புரந்தரனார் புத்திரியும் பொற்பதியைக் கண்டவுடன்
சுரந்து வளைந்து மகிழ்ந்தசைந்து ஓடுவதும்
பார்த்து மனமகிழ்ந்து பழனி தனைமறந்து
வேர்த்துக் கடம்பனொடு விளம்புவா ளோர்வசனம்
என்னினைவை மாற்றும் இளங்கிளியா ளெவ்விடங்காண்
சந்நிதியில் தானோ தைய லிருப்பதுகாண்
வேடுவச்சி தன்னை விரும்பிநீர் மேலாக
கூடுவிட்டுப் பாய்ந்ததுபோற் குறத்தி யொடுமிருந்து
உன்மாமன் நெய்திருட உரியேற மாதர்கண்டு
வன்மெழுக் கையாலே மாறியடி பட்டகுலம்
ஆசான் குழலூதி ஆவினங்கள் மேய்த்திருந்த
மாசன் மருகாவுன் வைப்பாட்டி யைத்துரத்தி
இருந்தாலே உன்னோடு இணங்கி நடந்திடுவேன்
பொருந்தாதே போனாற் போவேன் பழனிதனில்
ஒட்டியிரேன் நானும் உனக்குப்பெண் வேணுமென்றால்
எட்டியிருக்க வைத்தால் இணங்குவே னும்மோடு
மாணிக்க வாசகரும் மாதவத்தோன் முத்துலிங்கர்
தானிங் கிருந்து சமாதிகொண்ட தும்மாலே
காட்டு மடந்தையரைக் கலியாணஞ் செய்வதினால்
மாட்டியைய ருங்கள் மரபிதென வேலவரும்
கேளாயென் மாதே கிளிமொழியாள் வள்ளியம்மன்
ஏழு பிறவி எடுத்தா ளெனைஅணைய
மானீன்ற கன்னியல்ல மாயவனும் லெட்சுமியும்
தானின்று விட்டகன்றார் சண்முகனே தஞ்சமென்று
வெள்ளானை யீன்றுவிட்ட மெல்லியர்காண் நீர்தானும்
புள்ளிமா னீன்றதிருப் பொற்கொடிகாண் வள்ளியரும்
மாதவனார் உங்களையும் மாயையதா யீன்றுவிட்டார்
ஆதவன்போல் நாங்கள் ஆண்டிருப்போ மிப்பதியை
அக்கைகங்கை யென்றும் அரிய பிறவியென்றும்
ஒக்க விருந்தால் ஊழிமுடி வாகுமட்டும்
திருவு முருவுஞ் சேருமிந்தச் சந்நிதியில்
கருதிப் பழனிதன்னைக் காவல்கொண்டு யான்வருவேன்
உன்னடியார் கூடி உகந்தை கதிரைமலை
தன்னடிமை யாக்கித் தான்வரட்டும் மாதரசே
வள்ளியர்க்கு இப்பதியும் வாழும் தினைப்புனமும்
தெள்ளியதோர் வேடர்குலம் சேர்ந்துஅர சாண்டிடட்டும்
நானே நிறைந்திருப்பேன் நரலோகத் தண்டமெழ
கானவர்கள் பூசைசெய்வார் கண்டு மகிழ்ந்திடுவோம்
வள்ளியெதி ராயிருக்க மானே யருகிரும்நீர்
வெள்ளானை மீதேறி வீதிவலம் யான்வருவேன்
ஆமென்னத் தெய்வானை அதற்கிசைய வேலவரும்
ஓமென்னும் மந்திரத்தை உச்சரித்தா ரம்மானை
வாசவனார் புத்திரியை வைத்தார் அருகாக
நேசமுற்ற வள்ளியரை நேரா யிருத்தியபின்
ஏழு மலையும் இலங்கி வளர்ந்தோங்கி
வாழுமென்று கந்தர் மகிழ்ந்தார்கா ணம்மானை
ஊழி முடிந்தாலும் உம்ப ரழிந்தாலும்
வாழ்வுபெற்று இப்பதியும் வருமென்றா ரம்மானை
வடக்கி லுயர்ந்ததமிழ் மதத்தினர்க ளிங்குவந்து
அடக்க முறையோ டமர்வாரென்றா ரம்மானை
அண்டத் தசரீரி ஆகாயந் தன்னில்நின்று
தொண்டு வெகுசெய்து துதிக்குமென்றார் அம்மானை
வேந்தர் மகிழ்ந்து மேதினியோர் தான்புகழ
சேர்ந்துவெகு ஆலயங்கள் செய்வரென்றா ரம்மானை
திருக்கேச் சுரமும் தென்கதிரை மாமலையும்
விருப்புற் றிருக்க விடைகொடுத்தா ரம்மானை
எமகூடம் நீலம் இமயம் கயிலைவிந்தம்
விமநிடதம் மந்தாரமும் மேவுகந்த மாதனமும்
மூவுலகோர் தான்மகிழ்ந்து முனிசுரர்க்கு நற்பதியாய்
மேவுமென்று கந்தர் விடைகொடுத்தா ரம்மானை
மிக்கோர் கலைஞர் மேவுங் குறவருடன்
நக்கோர் களிப்பதில் தரிப்பரென்றா ரம்மானை
ஆடு குண்டைதண்டு அலவன் அரிமடந்தை
தேடுகோல தேழும் சேர்ந்த கொடுமரமும்
சாடிமான் மீனமதார் வியமாய் ஆறுமுகன்
கூடியிருக்கு தென்று குமரவேள் தானிருந்தார்
தார மிரண்டுடனே சண்முகனார் வீற்றிருக்க
வார மிரண்டெனவே வந்ததுகாண் பூவுலகில்
தெற்கு வடக்குஎன்றும் தென்கயிலை நற்பதியாம்
கற்கும் புலவரெல்லாம் காட்சிபெறப் பாடினராம்
1997வாழி✓
மும்மூர்த்தி வாழ்க முருகவேள் தான்வாழ்க
அம்மையுமையாள் வாழ்க யானைமுக வேள் வாழ்க
இந்திரனும் தேவர்களும் இருஷி கணநாதர்
அந்தரத்தோர் அட்டசத்தி அண்டபிண்டந் தான்வாழ்க
அறமுயர்ந்து வாழ்க அவனியெல்லாந் தான்வாழ்க
திறலரசர் வாழ்க தெய்வதுதி தான்வாழ்க
கூடமுயர் ஏழுமலை குன்றாமல் தான்வாழ்க
வள்ளிதெய் வானையொடு மாணிக்க வாசகரும்
புள்ளிமயில் முத்துலிங்கர் பொற்பதியும் தான்வாழ்க
மானினங்கள் வாழ்க வாசமலர் தான்வாழ்க
கானிலுயர் தாபரங்கள் களித்துயர்ந்து தான்வாழ்க
பாடினோர் வாழ்க படித்தோர் மிகவாழ்க
நாடியே கேட்டு நவின்றோர்கள் தான்வாழ்க
ஏட்டி லெழுதி எங்கெங்கும் வைத்தோர்கள்
தாட்டியமாய் வாழ்ந்து சஞ்சரிப்போர் தான்வாழ்க
கூடினோர் வாழ்க கும்பிட்டோர் தான்வாழ்க
தேடிக் கதிர்காமஞ் சேர்ந்தோர்கள் வாழியவே.