புனவர் ஒருமித்துப் பூவெடுத்துத் தேனெடுத்து
கனவி னுரைப்படியே கங்கைநீர் கொண்டுவந்து
தேக சுத்திசெய்து திருநீற்றுக் காப்புமிட்டு
ஏகவுயிர் தான்டங்கி இருக்குந் தவசியர்க்கு
மலரை யிறைப்பார்கள் மாணிக்கப் பிள்ளையென்று
சிலரோடிச் சென்று தேன்கட்டி வைத்திடுவார்
வனத்து மடந்தையர்கள் மகிழ்ந்து குரவையிட
கனத்தசிலை வேடரெலாங் கையெடுத்துக் கும்பிடுவார்
தேனை யிறைப்பார்கள் தினைமாவைக் கொண்டுவைப்பார்
வீணை யொலிப்பார்கள் வேலவர்க்கு மாமெனவே
துதித்தார்கள் வேடுவர்கள் சூழ்ந்தார் கதிரையெங்கும்
கதித்தபுகழ் வள்ளியொடு கந்தருந் தான்மகிழ
இந்தப் படியே எள்ளருண்டை மாங்கனிதேன்
கந்தம் புனுகு கமகமெனத் தான்படைத்தார்
வள்ளியரும் வேலவரும் மாணிக்க வாசகர்க்கு
தெள்ளியதோர் பூசைகண்டு செழித்துக் களித்திருப்பார்
விண்டு மகிழ விண்மகிழ மண்மகிழ
அண்டர்கோன் புத்திரியும் அடியான் அறுமுகனை
காணாமல் வாடிக் கலங்குவதோ யானறியேன்
தோணாரோ வென்று துதித்தான்கா ணம்மானை
வாரிசூழ் பூவுலகில் மாணிக்க வாசகனார்
ஆரியனார் மைந்த னென்பனொடு தானிருந்து
வாதுபல கூறி வழக்குண்டோ யானறியேன்
ஆதியே முத்துலிங்க ஐயரே வாருமிங்கே
என்றழைக்க முத்துலிங்க ரெழுந்தே யடிபணிய
தண்டமிழ்சேர் தெய்வானை சாற்றுவா ளோர்வசனம்
அந்தகன்போல் நாரதனும் அரன்மகனார் தன்னிடம்
வந்து வணங்கிநின்று மகிழ்ந்து ரகசியங்கள்
பேசி யொருபடத்தைப் பெருந்தாளம் போற்கொடுத்து
ஆசி பலகூறி அகன்றதென்றா ளம்மானை
தாசியர்மே லாசைகொண்ட தன்மைபோல் கங்கைமைந்தன்
வாசியென யோகம் வகுத்தார்பின் காணவில்லை
அப்போது மாணிக்க வாசகரைத் தானழைத்து
தப்பாம லென்றன் சாமிதன்னைத் தேடுமென
ஆகந் தனையடக்கி யாய்ந்து விழித்தபின்பு
தாகமுடன் தென்கதிரை சார்ந்தா ரெனவுரைத்தார்
ஐயாநீர் அங்குசென்று அழைத்துவா வென்றனுப்ப
மெய்ய னகன்றார் விரைவில் வராதமையால்
வாது பலபேசி வருந்தி யிருப்பதுண்டோ
ஆதியே முத்துலிங்க ஐயரே நீருமிங்கு
துரித நடையோடு சென்று சூரர்குலம்
முருகன் தனையழைத்து மூவருமாய் வாருமென்றாள்
வாவென்னத் தெய்வானை வரத்திலுயர் முத்துலிங்கர்
நாவசைத்து ஆமெனவே நமஸ்கரித்துத் தானெழவே
வாழ்த்தி வரங்கொடுத்து வடிவேலரைக் காணில்
தாழ்த்தி நடவாதே தாமதியா தேகுமென்றாள்
அம்ம னுரைக்க அடிபணிந்து முத்துலிங்கர்
செம்மையொடு நடந்த செய்திகே ளம்மானை