முருகன் App
கதிர்காமத்து அம்மானை
மதனனைப் பெண்ண5 / 18
கதிர்காமத்து அம்மானை

மதனனைப் பெண்ண

9விருத்தம்✓
மதனனைப் பெண்ண தாக்கி வானவர் அயன்மால் கூடி
விதனமே தீர்க்க வென்று விளங்கிய புராந்த கன்முன்
சுதனெனத் தோன்ற மாரன் சுடலையில் நடித்த ஈசன்
பதமதாய் விழித்து ஈன்ற பகவனைத் தேடிச் சென்றார்.
10நடை✓
விளங்கும் அரியயனும் மேலோரும் இந்திரரும்
உளங்களிக்க வேதமதால் ஓர்ரதத்தைத் தானியற்ற
வேணுமென எண்ணி வேண்டும்படி இயற்றி
தோணும் அழகுடனே சொல்லுங் கிரணமுடன்
ஓது தமிழ்வேதம் ஒருநாளும் குன்றாமல்
கோதைஉமை பாகரிடம் கொண்டு நடக்கையிலே
கருவி அரவமிடக் கலித்தல் கிலுக்கமுற
குருமித்தல் ஆர்த்திலிங்க கொண்டரனார் தன்னிடத்து
வைத்தார் நமஸ்கரித்தார் வானவரும் மாலயனும்
கைத்தலத்தான் செய்தகுறை காட்டலுற்றா ரம்மானை
இந்திரனார் நன்னரசை ஏற்றரசு சாட்டியபின்
பந்தயம் கொண்டுநம்மேற் பலதீமை செய்யலுற்றார்
எண்ணரிது தேவர் இடுக்கமதைச் சொல்வதற்கு
பண்ணுப் புகழ்சூரர் பகைஅகற்று மென்றழுதார்
அப்போ தரனார் அமருமென்று தேவர்களை
துழவன்றனை நோக்கிச் சொல்லுவார் ஓர்வசனம்
பிஞ்சு மதிசூடும் பெருமான் மனதிரங்கி
அஞ்சாதீர் மாலயனே அறுமுகனார் தீர்ப்பார்காண்
வாரு மிருமென்று மாதுமையைத் தானழைத்து
தாரகச் செற்றோனைத் தானழையு மென்றுரைத்தார்
அம்பிகையாள் கேட்டு அகமகிழ்ந்து வேலவரை
உம்பர்பூத லோரறிய ஓடிவா வென்றுரைத்தாள்
அன்னா னறுமுகனும் அன்னை அழைத்திடவே
முன்னோன் மகிழ்வுமை முலையுண்டு தானிருக்க
ஏனழையு மென்றீர் என்னுடைய புத்திரனை
நானழைத்தே னிப்போ நவிலுகென்றாள் சாம்பவியும்
சடையோ னுரையைத் தான்நோக்கி ஒதுவது
விடைஒன்று யான்பகர்வேன் விளங்கி அறிந்திடுவீர்
தேவியரே மகளும் தேவரோடு இந்திரனும்
கூவி அழுதசுரர் கோரந்தீ ரென்றழுதார்
பாவி அவுணரொடு பாலகனைத் தானனுப்பி
தாவி அமர்புரியத் தானழையு மென்றுரைத்தேன்
மங்கையோர் பாகா வானவர்க்காய் என்மகவை
பங்கமது செய்தசூரர் பழிவாங்க வைத்திடவோ
அண்டபிண்ட மெல்லாம் அழித்துப் படைக்கவல்லாய்
பண்டு பழிஅகற்றப் பாலகனை ஏவுவனோ
தாளிற் புழுதிபடத் தாவிவிளை யாடுவோனை
வான்புகழ் சூரனுடன் வன்போர்க் கனுப்புவனோ
வில்வி தலையன் விண்முழுது மாளிபுத்தன்
சொல்லி அயன்தேவர் சூரனுக்காய்த் தான்பயந்து
மறைந்திருந்து எந்தன் மைந்தனையோ ஏவென்று
சிறந்துரைத்தா ரென்று செப்புவதா லேகவிடேன்
என்றா ளுமையாள் ஈசன் மனமகிழ
நன்றான வார்த்தை நவிலலுற்றார் அம்மானை
குழக னுமைமடியிற் குஞ்சிரிப்புக் கொண்டிருந்தது
துழவன் மருகன் சொல்வா ரொருவசனம்
அன்னை முகம்பார்த்து அறுமுகனு மப்பொழுது
என்னை யனுப்பும்ம்மா இமையோரைக் காத்திடுவேன்
அண்டமெல்லாம் ஓர்குடைக்கீழ் ஆண்ட அவுணர்களை
துண்டதுண்ட மாகத் துணிப்பே னெனைஅனுப்பும்
ஆசா னிவையுரைக்க ஆதியுமை தான்மகிழ்ந்து
நேசமுடன் போயுன் நினைவின்படி வாருமென்றாள்
கந்த னெழுந்து கங்கை அணிவோனை
மைந்தனென வணங்க வரங்கொடுத்தா ரம்மானை
விடைகொடுக்கக் கண்டு வேதாவ மாலோனும்
அடைவுடன் போர்க்கோல மாகுமென்றா ராதிசிவன்
தண்ணீராலே கழுவிச் சங்கரனு மாதுமையும்
வெண்ணீ றெடுத்து மேனிஎங்குந் தானணிந்து
சந்தனப் பன்னீர் தான்குழைத்துப் பொட்டுமிட்டு
விந்தையோடு போர்க்கோலம் வேணுமட்டும் இயற்றி
வில்லொருகை வாளொருகை வெல்லும் சரமொருகை
செல்லைசமு தாடிருகை ஒருகை தண்டுஒருகை
சூலாயுத மொருகை துணைக்கருவி தானொருகை
மாலாயுத மொருகை வச்சிராயுத மொருகை
வேலாயுதங் கொடுத்து விண்ணவரைக் காருமென்று
காலாயுதங்க னெல்லாங் கந்தருக்கு மிந்திரனார்
வீரவாகுப் படையும் விண்ணவர்கள் விற்படையும்
சீராகவே கொடுத்துச் செப்புவா ரோர்வசனம்
கண்டு வெகுண்டுவருங் காசினியிற் சூரர்களை
வென்று வாவென்று விடைகொடுத்தா ரம்மானை
மாயன் மருமகன் வரம்பெற்றுத் தானெழுந்து
மாயைவளர் சூரர்களைத் துணிப்பே னெனநடந்தார்
காளி கணங்கள் கசவாகு தேவருடன்
வாளி வில்லேந்தி வந்தெதிர்த்தார் சூரனுடன்
கண்டானே சூரன் கண்கள் சிவந்திடவே
அண்டம் கிடுகிடென்ன அடுக்கு நிலைகுலைய
ஆர்ப்பரித்துச் சூரன் அதட்டி அறுமுகனை
தார்ப்பரிய முள்ளவர்போல் சமர்செய்ய வந்தீரோ
முன்பு அமரரோடு முட்டிப் படைபொருதி
பின்காட்டி ஓடவைத்தேன் பிள்ளாய்நீ நில்லாதே
சொற்கேட்டு ஓடிவிட்டால் துன்பமது வாராது
மற்கட்ட வந்த மதலைபோல் ஆனீரே
சிவனு மயனும் திருமாலும் முன்னாளில்
தவனடமு னெனக்காய் தானே மறைந்திடுவா
தம்பியரே உம்மோடு சரிப்போர் புரியவொண்ணா
உம்பர் அறிய ஓடார் உயிர்பிழைத்து
என்று சூரன்கூற ஈசன்மகன் வெகுண்டு
மண்டலத்தை ஆளும் மமதையோ உந்தனுக்கு
வாடாநீ இப்போ வதைப்பேனென் கையாலே
மூடா கேளின்று முடிவாகும் நாளாச்சே
என்னை யாரென்று இகழ்ந்து நகைத்தீர்நீர்
உன்னோடுன் னுற்றாரை ஒருநொடியி லேமடிப்பேன்
பாரடா வென்று பற்கடித்து வேலவரும்
சூர னுடலைத் துணிக்கச் சிலைவளைத்து
விட்டாரே பாணமது விண்ணதிர மண்ணதிர
பட்டு மடிந்தான்காண் பத்மா சூரனுந்தான்
ஏவுஞ் சரங்களெல்லாம் எண்ணரிய சூரர்களை
கூவி அழிக்கக் குறைத்தலைகள் கூத்தாட
தாருகன் சிங்கமுகன் சண்முகனார் தன்னுடனே
பாரேழ் நடுக்கமுறப் பற்கடித்து வில்வளைத்து
சேனை ஒருகோடி தேர்ப்பரிகள் முக்கோடி
யானை ஒருகோடி யாளிசிங்கத் தேர்கோடி
எல்லையில்லாச் சேனை இருபுறமுஞ் சூழ்ந்துவர
வில்லிற் கணைதொடுத்து விட்டான் அறுமுகற்கு
கோடையிடி போற்சரங்கள் கொக்கரித்து முன்வரவே
வாடாமல் மால்மருகன் வடிவே லெடுத்தெறிந்தார்
அவுணர்குலம் வேரறுத்து அறுமுகனார் கையதனில்
மவுனமுடன் வந்து வடிவே லிருந்ததுகாண்
கூளி நரிநாய்கள் குறைத்தலையைத் தின்றாடும்
காளியொடு பேய்கணங்கள் களித்துமிகக் கொண்டாடும்
கோழி மயிலாகக் கொண்டெழுந்த சூரர்தமை
வாழுங் கரங்கொடியும் வாகனமும் ஆக்கினராம்
நறுமலர்கள் தானெடுத்து நான்முகனுந் தேவர்களும்
பெருமழைபோல் கந்தருக்கும் பெய்தார்கா ணம்மானை
தம்பட்ட மல்லாரி தாரைசின்னஞ் சங்கசைய
கும்பிட்டார் வானவர்கள் கூத்தாடி னார்மகிழ்ந்தார்
மேள மொலிக்க விண்ணவர் தாம்செழிக்க
வேழ முகத்து விநாயகரைத் தான்போற்ற
சங்கர னார்தான் சண்முகனை முத்தமிட்டு
நீக்கினீர் தேவசிறை நீடூழி வாழுமென்றார்
அன்னேரங் காங்கையரும் அண்ணாவென வணங்கி
மண்ணாசை கொண்ட வல்லசுரர் தங்களையான்
சமரில் அழித்தேனே தானவர்கள் கண்டுதொழ
அமரருக்கு வேண்டும் அரியவரம் நீரளிப்பீர்
என்று வடிவேல ரியம்புமந்த வேளையிலே
கண்டு வரங்கொடுத்தார் கனிஉகந்த கற்பகமும்
வாங்கினார் தேவர் மகிழ்ந்தா ரடிபணிந்து
ஓங்கு புகழுயர உன்கிருபை தாருமென்று
பாகசாத னன்றனக்குப் பட்டமது கட்டுதற்கு
நாக மணைத்துயிலும் நாரணனும் வேதாவும்
சுரருடனே வேலோனுந் தொழுது கணபதியை
சிரமகுடஞ் சாற்றித் தேவரெல்லாங் கொண்டாடி
திட்டமுட னாண்டு தேவர்களைக் காருமென்று
பட்டந் தரித்தார்காண் மாவிந்திர லோகமதை
மாசகற்றி வைத்தார் வடிவேல ரம்மானை
பூசுரனுங் கந்தரைத்தான் போற்றிசெய்து ஓதலுற்றார்
வானுலகம் வாழ மாதுமையாள் தான்மகிழ
மானாள்தெய் வானைதனை மன்றல்செய்வீ ரென்றுரைத்தார்
மலரோ னுரைகேட்டு வடிவேல ரப்பொழுது
அலர முகம்பார்த்து அகமகிழ்ந்தா ரம்மானை
தேவர் கோன்றானுஞ் செந்தில்வடி வேலவரை
ஆவலுடன் பார்த்து அறைவா ரொருவசனம்
என்மகளை மன்றல்செய்தால் ஈரேழு லோகமெல்லாம்
உண்மையுடன் வாழுமென்று ஓதி அடிபணிய
கரியமால் தன்மருகன் கந்தர் மனமகிழ்ந்து
அரிவைதெய் வானைதனை அழையுமென்றா ரம்மானை.