கதிர்காமத்து அம்மானை
பரணதி லிருந்த12 / 18
கதிர்காமத்து அம்மானை
பரணதி லிருந்த
23விருத்தம்✓
பரணதி லிருந்த வள்ளி தவத்தினாற் பரம னாலே
சரவண னதனிலு தித்த சண்முகன் பின்னே செல்ல
மரமது வெட்டித் தேனும் கனிகொடு வந்து வேடர்
கரமது சிரமேற் கொண்டு கானமே தேடிச் சென்றார்.
24நடை✓
தேனுங் கிழங்குந் தெவிட்டாக் கனிகளெல்லாம்
வேணும் படியெடுத்து வேடுவர்கள் தான்வரவே
கங்கையெனும் பொய்கைக் கரையருகிற் பார்ப்பளவில்
தங்கையரின் காற்சுவட்டைத் தானிருக்கக் கண்டவர்கள்
மடந்தைஎனும் வள்ளியம்மை வாரதில்லை யிவ்விடத்தில்
நடந்தறிவோ மென்று நற்புனத்தில் வந்தார்கள்
அன்னமெனும் வள்ளி அங்கிருக்கக் காணாமல்
மன்னனொடு வேடுவர்கள் வனமெலாம் தேடலுற்றார்
செப்பரிய மாணிக்கஞ் சேர்ந்திருக்கும் சந்நிதியின்
தப்பாமற் தேடித் தானலைந்து கானவர்கள்
சென்றார் கதிரைமலை திக்கெட்டுந் தேடவென்று
கன்றித் தடங்களையும் கண்டே யழுதழுது
தங்கையரே யென்று சஞ்சலங்கள் கொண்டுநின்று
மங்கையென வேலவனார் மணஞ்செய்து கொண்டாரே
திங்கள் தனையணியும் சிவனார் மகனுடனே
எங்களையும் நீமறந்து ஏகினையோ தங்கையரே
கந்தன் கடம்பனென்று கனவு நினைவதிலும்
எந்தநாளும் மறவா திருந்ததினாற் சென்றீரோ
தேடித் தவம்புரிந்து செந்தில்வடி வேலரொடு
கூடிக் கதிரைமலைக் குகையிற்குடி கொண்டீரோ
வரையேழுந் தேடி வள்ளியரைக் காணாமல்
தரையிலுருண் டுருண்டு தங்கையரே என்றழுதார்
அழுதழுது விண்டுவிட்டு அன்னவர்கள் தானிறங்கி
பொழுது மறையுமுன்னம் போவோ மெனநடந்து
வாற வழிதனிலே வஞ்சியரைக் காணாமல்
சேறு தனில்நடந்து தேம்பிப் புலம்பலுற்றார்
வாவிதனிற் கயல்கள் வள்ளியரைக் கண்டீரோ
தாவும் மயில்காளென் தங்கையரைக் கண்டீரோ
கூவுங் குயிலினங்காள் கோதையர்கள் வந்ததுண்டோ
மேவும் முகிலினங்காள் மெல்லியரைக் கண்டீரோ
மானி னினமே மலைக்காட்டு நங்கணமே
தேனினிய வாயாள் செவ்வள்ளி யாரணங்கை
கண்டீரோ சொல்லுமென்று கானவர்கள் தான்புலம்பி
தண்டுள மால்மருகன் சண்முகனே தஞ்சமென்று
வந்தார் தினைப்புனத்தில் வள்ளியவ ளில்லையென
நொந்தா ரழுதார் நாதனம்போ லாகுதென்று
தேடாக் கனியே தெவிட்டாத தெள்ளமுதே
வேடர் புனத்தைவிட்டு வேலரொடு சென்றாயோ
பரணதனைப் பார்த்துப் பாவைய ளில்லையென
தரணிபுகழ் வேடரெல்லாந் தானழுதா ரம்மானை
அழுதகுரல் மாற அசரீரி யொன்றுநின்று
தொழுது கடம்பனொடு தோகைசென்றாள் தேடாதீர்
சென்றாளே வள்ளியம்மை தேடாமலே மகிழ்ந்தால்
வண்டாடு மிப்புனமும் வாழுமென்று சத்தமிட
கும்பிட்டார் வேடுவர்கள் கூத்தாடி னார்மகிழ்ந்தார்
அம்புவில்லை வீசி ஆர்ப்பரித்து ஆடியபின்
தித்திதவில தாரை தேவதுதி போலார்ப்ப
சுற்றிக்கதிர் காமமெங்கும் தோரணமும் தாநிரைத்து
கொத்தாலே பந்தரிட்டுக் கோயிலென்று வேடுவர்கள்
நித்தந் துதிக்க நினைந்துகரங் கூப்பினராம்
மானிறைச்சி தேனும் வனத்தில் தினைமாவும்
தானெடுத்துக் கொட்டுவதில் சண்முகர்க்கும் வள்ளியர்க்கும்
வைத்து வணங்கி வடிவேலரைத் துதித்து
அத்தானே தங்கையென்று ஆடிப் பவுரணையில்
மாணிக்கக் கங்கையிலே வந்துநீ ராடினராம்
காணிக்கை கொண்டு கந்தருக்கு வைத்தனராம்
வைப்பார்கள் கும்பிடுவார் வாய்புதைத்து நின்றிடுவார்
அப்பா வறுமுகனே ஆரணங்கே வள்ளியென்று
உங்களைப்போல் தெய்வம் உலகத்திற் கண்டறியோம்
எங்களையுங் கார்த்து இரட்சிக்க வேணுமென்று
கானவர்கள் போற்றிக் கடுகப் புனத்திருந்தார்
வானவர்கள் புட்ப மழைபொழிந்தா ரம்மானை
மயிலேறுங் கந்தரவர் வள்ளியரைத் தானோக்கி
ஒயிலே ஒருவசனம் ஒதக்கே ளிவ்வேளை
வல்லவரா முங்களண்ணர் வனமெல்லாந் தேடியபின்
சொல்லரிய வாகாயச் சோதி மொழியறிந்து
கங்கை யருகுதனில் கனிதேன்மா கொண்டுவைத்து
மங்கையரே கோயில்கட்டி வணங்குவதைப் பார்த்தீரோ
காம மகற்றுங் கதிர்காமச் சந்நிதியில்
போவோ மிருபேரும் பொற்கொடியே வாருமென்றார்
ஆதிபரன் மைந்தன் அன்னநடை வள்ளியோடு
சோதிவளர் மாமலையைத் துதித்து வரும்போது
சொரூப மகற்றிச் சுற்றிக்கதிர் காமமெங்கும்
அரூபி யெனவிருவர் அமர்வோம் எனநினைந்து
பார்த்தனர்கள் கொத்துப் பந்த ரழகதனை
நேர்த்தி எனக்கண்டு நீங்கோம் எனவிருந்தார்
அன்றே தொடுத்து அதிசயமா யோர்விளக்கு
குன்று தனிலிருந்து கொண்டெரிந்த தம்மானை
மள்ளர் எழுந்திருந்து மலைமேலே பார்ப்பளவில்
தெள்ளுதமி ழிந்துமதம் சேர்ந்ததென்று ஆடியபின்
நாளுக்கு நாளாய் நற்கனியும் தேன்தினைமா
சூழப் படைத்துத் துதிப்பார்கள் வேடுவர்கள்
கண்டுமகிழ் வாரிருவர் கானவர்கள் செய்பூசை
என்று முவந்தே யிருந்தார்கா ணம்மானை
சாற்றரிய கந்தரோடு தையலெனும் வள்ளியரும்
தோற்றப் படாமல் சுயரூபத் தோடிருவர்
வருவார் கதிரைமலை வானவர்க்கா யம்மானை
பிரியார் கதிர்காமம் பெருமையுற வாழ்ந்திருப்பார்
தங்க நிலமும் சந்தன மாமலையும்
எங்கும் மலர்பூத் திலங்குமிந்த மாபதியில்
கங்கைதனில் மாணிக்கம் கருணையொடு தான்விளையும்
பங்கமில்லா வெண்ணீறு பார்மலைபோல் தோணுவது
கண்டு களித்துக் காங்கேயரும் வள்ளியரும்
என்று மகலா திருப்போம்நா மிவ்விடத்தில்
ஆடுவோங் கங்கைநீ ரணிவோந் திருநீறு
பாடுவோம் நாங்கள்கொத்துப் பந்தருக்குள் வந்திருந்து
மானிடர் காணாமல் மறைவா யிருபேரும்
கானவர்கட் கெல்லாங் கருணை கொடுத்திடுவோம்
வானவர்கள் கூடி வாழ்கதிரை மாமலையில்
தேனேஎன் வள்ளியரே தெவிட்டாத தெள்ளமுதே
ஒன்பது ரத்தினத்தால் ஒதரிய ஆலயங்கள்
அன்போ டியற்றி அதற்கு மதிலிழைத்து
சிங்கா சனமமைத்துத் திருமாலும் வேதாவும்
மங்கா மணிவிளக்கு வைத்து வணங்குவதை
பார்த்தீரோ எந்தன் பைந்தொடியே யிப்போது
காத்திரமாய் விண்ணவர்க்குக் கருணை கொடுப்பதற்கு
ஓடிக் கதிரைமலை உற்றிருப்போம் வள்ளியரே
பாடிக் கதிர்காமப் பந்தலுக்குள் வந்திருப்போம்
அகலாமல் நாங்கள் அங்குமிங்குஞ் சென்றிருந்தால்
புகழாய் நமக்குப் பூசை புரிந்திடுவார்
இவ்வார்த்தை வேலர்சொல்ல இளங்கிளி ஏதுசொல்வாள்
ஒவ்வாதே எங்கள்சிற்றூர் உங்களுக்கு வேலவரே
தலைமே லுனது தாளினையைப் பூண்டுகொள்வேன்
மலைமே லிருந்திறங்க மாட்டேனென்றாள் வள்ளியரும்
அப்படிநீர் சொல்லாம லங்குமிங்குஞ் செல்வதற்கு
ஒப்பிடுவேன் கேளும் ஒண்டொடியே யிப்போது
தேவரெலாங் கண்டுதொழத் திருமலையி லேயிருப்போம்
பூவுலகோர் வந்துதொழப் புகழ்த்திருச் சந்நிதியில்
உறைவோ முலகோரு முற்றவிமை யோர்காண்
நிறைவே னறிவீர் நீங்கா தொளியாக
என்றுவடி வேலர்சொல்லி யிருக்கும் தருணமதில்
சென்றுசிலை வேடுவர்கள் தேனெடுக்கப் போம்வழியில்
வள்ளி சுவடும் வடிவேலர் தன்சுவடும்
வெள்ளையானை காற்சுவடும் வேடுவர்கள் கண்டுநின்று
தங்கையரைத் தான்நினைந்து சண்முகனைப் போற்றிசெய்து
உங்கள் திருவருளை ஊழிமுழு வாகுமட்டும்
அப்பனே காட்டு அரிய திருப்பத்ததை
எப்போது காண்போம் என்றனர்கா ணவ்வளவில்
நடந்து மலைமேலே நற்கனியும் தேனெடுத்து
கடந்தார்கள் சிற்றூர்க்குக் கானவர்க ளம்மானை
சொற்பயிலும் மின்னாரும் தோகைமயில் வேலவரும்
பொற்பதியிற் தர்க்கமிடும் புதுமைகே ளம்மானை