முருகன் App
கதிர்காமத்து அம்மானை
புரந்தரன் மருகன்16 / 18
கதிர்காமத்து அம்மானை

புரந்தரன் மருகன்

31விருத்தம்✓
புரந்தரன் மருகன் தானும் புகழ்பெறும் கதிரை சேர்ந்து
வரந்திகழ் சூழப் பெற்ற வரையேழு மொளிகள் வீச
கரந்தனர் வள்ளி யோடு கானவர் பணிகள் செய்ய
இருந்தனள் தெய்வ யானை ஏகினர் தவத்தி லுற்றார்
32நடை✓
தென்திசையை நோக்கித் தீதகலத் தான்வரவே
புன்சிரிப்புக் கொண்டு புகழ்ந்துவடி வேலவரும்
வாரார்காண் முத்துலிங்கர் வாழ்கதிரை மாநகர்க்கு
பாராய்நீ யென்றே பகர்ந்தனராம் வள்ளியர்க்கு
அடிக ளெனத்திரிவார் யமரர்க்குத் தொண்டுசெய்வார்
கொடிக ளுயர்த்திக் கும்பிட் டடிபணிவார்
ஆல மருந்தார் அன்னமுண்டு பின்துயிலார்
பாலும் பழமருந்திப் பழனிதனி லிருப்பார்
கனல்போ லிருவிழியும் கவுணமென வைம்புலனும்
அனல்போ லுடலும் அருள்ஞானப் பார்வைகளும்
இப்படியாய் எண்கணக்கு இல்லாத என்னடியார்
தப்பாம லேபழனி தானிருந்து வாழுகிறார்
ஒருவ ரொருவரென உற்றதிருச் சந்நிதியில்
வருவார்காண் வஞ்சியரே வாழ்கதிரை மாநகர்க்கு
வந்தா லகலார் வாழ்கதிரை மாமலையில்
சிந்தை களித்துச் சேர்ந்திருப்பார் கண்டறிநீ
வேந்தர் சிலர்வந்து வேலா வெனத்தொழுது
நேர்ந்து திருப்பணிகள் நேர்மையுட னேயமைப்பார்
இன்னுஞ் சிலகால மேகினபின் மானிடர்கள்
பொன்னுலக மென்று போற்றி வருவார்கள்
மானாரோ டாறுமுகன் மலரலர்ந்து செப்பிடவே
தேனார்தெய் வானையிடஞ் சித்த ரதிகமென்ன
சொல்லென்று வள்ளியம்மை தோகையில் மீதேறும்
வல்லவனார் கூறும் வண்மைகே ளம்மானை
அடியா ரதிகமுள்ளார் ஆவேந் திரன்மகளார்
மிடியார்க்கு வேண்டும் வரமீவாள் வள்ளியரே
மூவர் முதலாக முக்கோடி தேவர்களும்
ஏவல் புரிவார் என்றுமக லாதிருப்பார்
விற்புருவ வேல்விழியார் மின்னார் நிலைமையொடு
அற்புதங்கள் கூறில் அநேகமென்றா ரம்மானை
அம்மொழியைக் கேட்டு அகமகிழ வள்ளியரும்
செம்மையுடன் முத்துலிங்கர் சேர்ந்தார் கதிர்காமம்