முருகன் App
சென்னைக் கந்தகோட்ட முருகப் பெருமான் கலம்பகம்
தண்டபாணி சுவாமிகள்
பனிக்காலம் அறுசீர்17 / 20
சென்னைக் கந்தகோட்ட முருகப் பெருமான் கலம்பகம் · தண்டபாணி சுவாமிகள்

பனிக்காலம் அறுசீர்

56✓
பொழிந்திடும்கார்க் குலங்களஞ்சிப் புறம்போகாப்
பனிவிளையும் பொல்லாக் காலம்,
வழிந்தமதுப் பூங்கமலம் மடியுமென்றால்
எவர்க்காகும்? மலர்க்கைத் தீயும்
கழிந்தமத கரித்தோலும் ஒருபாதிப்
பெண்ணுருவும், கனவெண் ணீறும்
குழிந்தகடல் விடத்துணவும் சென்னைநகர்க்
குகன்தாதை கொளல்நன் றாமே.
57மேற்படி எண்சீர்✓
நன்றறிவார் இனமலியும் சென்னை மூதூர்
நடுநிலவு குகன்திருத்தோள், நகில பாரத்(து)
ஒன்றிமகிழ் வுறுவார்க்கே நல்ல தாகி
ஒளிருமிந்தப் பனிக்காலத்(து) உரகம் பூண்டோன்
வன்றழலார் முதுகாட்டிற் சென்றான், மாயன்
வடவைத்தீ யுறுமிடத்தில் வசித்தான் வேதன்
கொன்றருந்தும் வேள்வியும்ஆ மெனத்தன் னூலிற்
குளிர்காயும் நிமித்தம்வம்பிற் கூறி னானே.
58மேற்படி எண்சீர் வேனிற்காலம்✓
கூறுநலம் அத்தனையும் குலவுதமிழ்ச்ச் சென்னைக்
குமரகுரு பரமுருகன் கொற்றநெடுந் தோள்சார்
ஆறுமணைந் திடுஞ்சுகம்நான் அடையாத காலம்
அரன்தலையிற் கங்கையினை அணிந்துகொண்ட காலம்
ஈறுதவிர் பாற்கடலில் அரிதுயின்ற காலம்
எழில்வேதன் தாமரைப்பூ வின்பயின்ற காலம்
மாறுபடாத் தேவர்குலம் அமுதம்உண்ட காலம்
வசந்தன்தேர் மிசைமதனன் வரும்வேனிற் காலம்.
59அறுசீர் வண்ண விருத்தம்✓
காலத்தொரு கன்மப் பிணிதீர் காதற்கொடு நின்னைத் தொழும்நான்
ஞாலத்தினர் எண்ணப் பெறுசீர் நாடிப்பெரி தின்னற் படலால்
ஆலத்தினை உண்ணத்துணிவார் ஆசற்றுய முன்னுற் றருள்வாய்
சீலத்துயர் சென்னைக் குகனே சேவற்கொடி உன்னப் புரியே.
60எண்சீர்த்தாழிசை✓
உன்னைப் புரியா விடில்என் றனையும்
உலகு(உ)ன் அடியான் எனஓ திடுமோ
என்னப் பனும்அன் னையும்அன் னவர்போல்
இருதெய் வமும்நீ யலதிங் குளவோ
முன்னப் படியென் னொடுசொல் லியவா
முடியா மலிருக் கமுறைக் கழகோ
சென்னைப் பதியிற் புலவோர் பரவும்
சிவசண் முகதே சிகசிற் பரனே.
61எண்சீர்த் தாழிசை✓
சிற்பரத்தில் உற்பவித்த செல்வனாகும் உன்னையே
தெண்டனிட்(டு) இறைஞ்சியும் திருட்டுநெஞ்சம் அமைவுறா(து)
அற்பவாச னைக்கண்எய்தி என்னையும்ப டுத்துபா(டு)
அறிகிலாய்கொல் இன்னம்நின் அருட்பெருக் கமைத்திலாய்
முற்பவத்தில் அப்படிக்கி ருந்த(து) உண்மை யாகுமோ
மோகமாதி இந்தவாறு முடிநிற்க லாகுமோ
விற்பனக்கு ழாம்இயைந்த சென்னையூரி டத்திலோர்
வேலணிந்து மயிலின்மேல் விளங்குகின்ற மெய்யனே.