கடல்நிறத் தொருவன் காக்கும் காவல்
இடர்படக் கண்டேம், ஈனர் தம்பால்
அவன்புணர் மனைமார் அடையக் கண்டும்
இவண்துயில் வுறல்நீத்(து) எழுகிலன், அந்தோ!
ஆதி நாயகற்(கு) அன்றுநீ அருள்கூர்ந்து
ஓதிய பொருள்புக்(கு) உள்ளதோர் எழுத்தை
இகழ்கிலார் அறுவரோடு யான்படும் இன்னல்
நிகழ்தரல் உனது நெஞ்சகம் அறியும்,
பைப்புற் கறிக்கும் பசுமரை, அயம்நேர்
கொம்புடை யினமும், குருகினம் ஆதிய
பிறவும் எய்துறு பெருந்துயர் கருதின்
அறவும் கொடிதே, ஐய கோகோ!
ஆதலிற் சண்பை அணிநக ரிடத்(து)ஓர்
மாதவன் மகவா வந்த வாறு
நீவர வேண்டும்; அலதுநீள் நிலத்(து)ஓர்
காவலன் அந்நாள் கன்னி நாடு
வாழ்வுறச் செண்டால் வடவரை இடித்த
காழ்பெருந் தடக்கைக் காளை யென்னத்
திகழ்தரல் வேண்டும்; அல்ல(து)என் னதுசிற்
றகம்அறி தரச்சொற் றதுசெயல் வேண்டும்;
அல்லது நீயூர்ந்(து) அகிலம் சூட
வல்ல தாய மயிலினை யேனும்
கூவுபே ரொலியாற் குலச்சுடர் மறிப்ப
மேவுதா னவர்தாம் வெருண்(டு)இரி தரச்செயத்
தக்கசெஞ் சேவல் தன்னை யேனும்
இக்கணம் அலைப்பால் எறிகடற் கனுப்பி
அன்னவன் துயில்கை(க்)கு அணையாம் அரவம்
இன்னலெய் துறவீழ்ந்(து) எழச்சொல வேண்டும்;
காவியங் கணையைக் கடைசியர் களைந்து
வாவிஅம் புயக்கண் மகிழ்நர்மேல் எறியும்
தண்பணைச் சென்னையிற் றழைந்து
விண்பதி புரக்கும் விகிர்தவே லவனே.