முருகன் App
ஸ்ரீ முருகக் கடவுள் அலங்காரபஞ்சகம்
எம் எஸ் சுந்தரேச ஐயர்
அவத்தினை யியற்றி15 / 22
ஸ்ரீ முருகக் கடவுள் அலங்காரபஞ்சகம் · எம் எஸ் சுந்தரேச ஐயர்

அவத்தினை யியற்றி

63நேரிசை ஆசிரியப்பா✓
அவத்தினை யியற்றி தவத்தினை விட்டு
ஆலயந் தொழுவதைச் சாலவு மறந்து
இருவினை யவைகட் கிலக்க மதாகி
ஈடணை மூன்றுந் கிருப்பிட மான
உறுதியில் நெஞ்சே! உரைப்பதைக் கேண்மியா
ஊறுகொள் புலன்களை யொருவழிப் படுத்தி
எக்குண னெவ்வண னென்றியம் பொண்ணா
ஏரகத் தண்ணலுக் கின்மலர் சாத்தி
ஐவந் தடைத்துநின் னாருயிர் நீங்குமுன்
ஒல்லையிற் பணிந்து உயர்கதி பெற்று
ஓதக் கடல்து ழலகில்
ஏதப் பிறப்பை யெற்றுதி நீயே.
64எண்சீராசிரிய விருத்தம்✓
நீக்கமற நிறைகின்ற நின்னீர்மை யறியாது
நீள்புவியில் யாத்திரைகள் செய்த பிழையும்
வாக்குமனக் கெட்டாத மறைக்கொ ழுந்தாயை
மதியிலியேன் வாழ்த்திமகிழ் கின்ற பிழையும்
ஊக்கமொ டருபியாய் நின்றவுனைக் கந்தனே
உருவாக மூர்த்தீ கரித்த பிழையும்
போக்கியெனை யாட்கொள லுன்பார மல்லவோ
பொன்னுலகம் போற்றுதிரு புனித வாழ்வே.
65சந்த விருத்தம்✓
வேதமொ டாகம மிகுபுகழ் மாவடி வேல்கந்தன்
சீதள தாமரை நிகரெழிற் சேவடி சிந்தித்தே
பூதல மீமிசை யளியெனும் பூகொடு போற்றாதார்
ஆதுல ராகியு மறிவிலி யாயு மலைவாரே.
66நேரிசை வெண்பா✓
அல்லும் பகலு மலைத்துவுமை விட்டகலா
தொல்லைதனை யெத்தாற் றொலைப்பீர்கள் - நல்லியல்சேர்
அஞ்சங் கரையாரும் ஆவியுதி கந்தற்கு
நெஞ்சங் கரையாத நீர்.
67கட்டளைக் கலித்துறை✓
நீரகத் தாமரைத் தேனினைச் சேலுண்டு நித்தமகிழ்
ஏரகத் தாமரைக் கந்தனைப் பத்தர்க் கெளியவனைச்
சீரகத் தாமரைக் கையன்மைந் தாவென்று செப்பமுடன்
நாரகத் தாமரைக் கன்னலுள் வார்க்கும் நரகில்லையே.