முருகன் App
ஸ்ரீ முருகக் கடவுள் அலங்காரபஞ்சகம்
எம் எஸ் சுந்தரேச ஐயர்
தானமுந் தருமமுந்9 / 22
ஸ்ரீ முருகக் கடவுள் அலங்காரபஞ்சகம் · எம் எஸ் சுந்தரேச ஐயர்

தானமுந் தருமமுந்

33நேரிசை ஆசிரியப்பா✓
தானமுந் தருமமுந் தவமும் கேள்வியும்
ஈனமில் கருமமு மெழிலுடைத் துறவும்
வித்தையும் வித்தமும் வேண்டா
நித்தமுங் கந்தனை நினைக்கவல் லார்க்கே.
34அறுசீராசிரிய விருத்தம்✓
கந்தியி னுச்சி மீது கமலம்வாழ் வாளை மீனம்
உந்தியே குதித்துப் பாளை யொடித்துயர் கனத்திற் றாவி
சிந்து மாமழை தன்னோடு சிறப்புட னிறங்குங் குன்றின்
அந்தம துடைய வாறு முகத்தனைப் போற்று வீரே.
35சந்த விருத்தம்✓
வீரக்கழல்செறி திருவடியும் விண்ணோர் சிறைவிடு கைம்மலரும்
சூரக் குடிகெடு வடிவேலுந் தூயர்க்கருளும் விழியெழிலுந்
தாரக் குழலியர் மதிமுகமுந் தாவிற் சிகியி னடல்நடையும்
பாரிற் புகழ்பவர்பெயர் சொலினும் பாவப் பிறப்பின் முதலறுமே.
36நேரிசை வெண்பா✓
அற்றவர்கட் கெல்லா மருநிதியாம் மெய்ந்நூற்கள்
கற்றவர் கட்கெல்லாங் கட்புலனாம்-முற்றிப்
பழமுதிர் சோலைப் பரப்பெங்குங் காணும்
பழமுதிர் சோலைப் பரன்.
37கட்டளைக் கலித்துறை✓
பரவார் மறந்து மவனடி யன்றியிப் பார்தனிலே
விரவா ரரிவைய ரின்பத் துறைக்கண் விருப்புடனே
இரவா ரொருவனை யேத்திப் பொருட்பெறு மிச்சையினால்
அரவார் சடிலத் திறைதரு கந்தனி னன்பர்களே.