முருகன் App
ஸ்ரீ முருகக் கடவுள் அலங்காரபஞ்சகம்
எம் எஸ் சுந்தரேச ஐயர்
தமனியப் பணிகள்18 / 22
ஸ்ரீ முருகக் கடவுள் அலங்காரபஞ்சகம் · எம் எஸ் சுந்தரேச ஐயர்

தமனியப் பணிகள்

78நேரிசை ஆசிரியப்பா✓
(வருக்க மோனை)
தமனியப் பணிகள் தகையொடு பூண்டு
தாமரைப் பொன்னென யாவரும் புகல
திரண்டெழு வகாட்டிடைச் சேய்தனைச் சுமந்தோர்
தீண்டாக் கற்புடைச் செம்மகள் துவண்டு
துவண்டடி வைத்தெனத் தென்றலங் குழவி
தூயவன் தமிழ்முனி தொன்மலை தோன்றி
தெருக்களி லாடுந் திருப்பரங் குன்றில்
தேவரு மூவரும் யாவரும் போற்றத்
தையல்க ளிருவராந் தாய்மா ரோடுந்
தொன்றுதொட் டமர்ந்த வன்றிறல் வேலோய்
தோத்திரஞ் செய்துவெந் துவக்கற நாயேன்
பன்மலர் தூவிப் பண்டுவுன்
பொன்னடி துன்னப் புரிந்திலன் தவமே.
79எழுசீராசிரிய விருத்தம்✓
தவலறு செல்வா சரவணே யென்றும்
தருநிகர் கரத்தா யென்றும்
அவமுறு மாக்கள் தமைப்புகழ்ந் தேத்தா
தடிகளைப் பாடுமா றருளாய்
சிவமணி நீறுந் தரித்தொளிர் மேனிச்
செல்வர்கள் வந்தடி பரவக்
குவடுகள் தோறுங் கோவில் கொண்டிருக்குங்
குமரனே யமரர் வாழ்வே.
80சந்த விருத்தம்✓
(நாரைவிடு தூது)
அமரருட்கற அமரியற்றிய அரனளித்தவ ராகிய
குமரனுற்றிடு சரவணப்புனல் குறித்தொலித்திடு நாரைகாள்
தமரவத்தியு மதியுறிச்சமு மிகுவதைத்திடு தன்மையை
உமைதனக்கொரு மகனெனத்தகு மவரிடத்தினி லோதுமே.
81நேரிசை வெண்பா✓
ஓதரிய சன்மப் பிணியை யொழிப்பதற்கு
வீதலிலா நன்மருந்தை வேண்டினால்-போத
உருகாவென் னெஞ்சமே யோர்முறையே யேனும்
முருகாவென் றேநீ மொழி.
82கட்டளைக் கலித்துறை✓
மொழியொக்கு மிக்கமு தம்பாற் குழல்யாழ் முகத்தினிடை
விழியொக்குஞ் சேலுங் கடலுங் கமலமும் வெற்பிளநீர்
கழியொக்குங் கொங்கை யுடையாளைச் சாலக் கரையவிட்டு
பழியொக்க கொள்ளுதல் நீதமோ கந்த பரம்பொருளே.