முருகன் App
ஸ்ரீ முருகக் கடவுள் அலங்காரபஞ்சகம்
எம் எஸ் சுந்தரேச ஐயர்
ஏருழுஞ் சாலி19 / 22
ஸ்ரீ முருகக் கடவுள் அலங்காரபஞ்சகம் · எம் எஸ் சுந்தரேச ஐயர்

ஏருழுஞ் சாலி

83நேரிசை ஆசிரியப்பா✓
ஏருழுஞ் சாலி லிலங்குமண் கட்டியைக்
காருறுஞ் சோலைக் கவின்கனி யிரசங்
கரைத்துழித் தணிகொள் கமலச் செய்சூழ்
திருச்செந் தூருடை செல்வப் பெருமான்
வேலின் றிறத்தை விளம்புவ ரார்கொல்;
வேலையு மோங்கலும் விண்ணுயர் மாவும்
சூரன் தகலமுஞ் சொல்லுமே சிறிதால்!
கூரிய சத்தியின் குணமிது வாகப்
பருப்பத மல்கிப் பல்லவங் கொள்ளும்
பொருப்பருக் கஞ்சிப் பூங்கொடி வள்ளியாங்
கோங்கில முலையாள் குளிர்கொள
வேங்கை யாகி நின்றதும் வியப்பே.
84அறுசீராசிரிய விருத்தம்✓
வியனுடைக் கோலமும் விளங்குநற் சிகியும் வெற்றி பூண்ட
புயமிசைத் தவழும் பொற்புடை கடப்பமும் பிரணவப் பொருளை
நயம்பட வுரைத்த செவ்வாயும் நல்லறு வதனமுந் தேவர்
பயமறச் செய்த வெஃகமு மெந்தனா பரவுதல் மறவாதே.
85சந்த விருத்தம்✓
தேவே தமிழ்பொழி கோவே திருமலி
சேய்மைப் பதிவளர் தருநீழற்
காவே யறுமுக வமுதே யருணிறை
கடலே யிமையவ ரடலேறே
பூவே மிகுநிறை யலையார் சரவண
பவனே புனிதம தில்லாவென்
நாவே முதலிய புலனைந் தனுமுனை
நன்றாய் வழிபட நல்காயே.
86நேரிசை வெண்பா✓
காய மெடுத்துக் கருக்குழியிற் சேராது
ஆயநல் வீட்டை அடைவதற்கு-நேயமாய்
கண்ணுங் கருத்தோடி கந்தனா ராரெழுத்தை
எண்ணு மறவா தெடுத்து.
87கட்டளைக் கலித்துறை✓
எடுத்த பிறவிக டோறு மிளைத்தே னினியுனது
அடித்தலஞ் சேரு முறையினைக் காட்டி யருள்புரிவாய்
படித்தல மீதினி லற்றவர் பற்றா பவப்பிணியைக்
கெடுத்தருட் செய்து விளங்குறுஞ் சேவலங் கேதனனே.