முருகன் App
காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார்
கோவில் வளம்7 / 24
காவடிச்சிந்து · அண்ணாமலை ரெட்டியார்

கோவில் வளம்

1✓
சென்னி குளநகர் வாசன்—தமிழ்
தேறும்அண் ணாமலைத் தாசன்—செப்பும்
செகம்மெச்சிய மதுரக்கவி
யதனைப்புய வரையிற்புனை தீரன்
அயில் வீரன்
2✓
வன்ன மயில்முரு கேசன்—குற
வள்ளி பதம்பணி நேசன்—உறை
வரமேதரு கழுகாசல
பதிகோயிலின் வளம்நான்மற வாதே
சொல்வென் மாதே.
3✓
கோபுரத் துத்தங்கத் தூவி—தேவர்
கோபுரத் துக்கப்பால் மேவி—கண்கள்
கூசப்பிர காசத்தொளி
மாசற்றுவி சாலத்தொடு குலவும்
புவி பலவும்
4✓
நூபுரத் துத்தொனி வெடிக்கும்—பத
நுண்ணிடை மாதர்கள் நடிக்கும்—அங்கே
நுழைவார்இடு முழவோசைகள்
திசைமாசணம் இடியோஎன நோக்கும்
படி தாக்கும்
5✓
சந்நிதி யில்துஜஸ் தம்பம்—விண்ணில்
தாவி வருகின்ற கும்பம்—எனும்
சலராசியை வடிவார்பல
கொடிசூடிய முடிமீதிலே தாங்கும்
உயர்ந் தோங்கும்
6✓
உன்னத மாகிய இஞ்சி—பொன்னாட்
டும்பர் நகருக்கு மிஞ்சி—மிக
உயர்வானது பெறலால்அதில்
அதிசீதள புயல்சாலவும் உறங்கும்
மின்னிக் கறங்கும்
7✓
அருண கிரிநாவில் பழக்கம்—தரும்
அந்தத் திருப்புகழ் முழக்கம்—பல
அடியார்கணம் மொழிபோதினில்
அமராவதி இமையோர்செவி அடைக்கும்
அண்டம் உடைக்கும்
8✓
கருணை முருகனைப் போற்றி—தங்கக்
காவடி தோளின்மேல் ஏற்றி—கொழுங்
கனல்ஏறிய மெழுகாய்வரு
பவரேவரும் இகமேகதி காண்பார்
இன்பம் பூண்பார்