முருகன் App
காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார்
பாங்கி தலைவியின் அவயவத்து அருமை கூறல்16 / 24
காவடிச்சிந்து · அண்ணாமலை ரெட்டியார்

பாங்கி தலைவியின் அவயவத்து அருமை கூறல்

1✓
சந்தவரை வந்தகுக நாதா—பரை
அந்தரிம னோன்மணியாம் மாதா—தந்த
சண்முகச டாட்சரவி நோதா
குழைக் காதா
சூரர் வாதா—வன
சஞ்சாரிவெண் குஞ்சரிச மேதா.
2✓
செந்தமிழ்அண் ணாமலையை ஆளாக்—கொண்ட
கந்தஅர விந்தமலர்த் தாளா—கள்க
சிந்திடுக டம்பணியும் தோளா
நெடு நாளா
மற வாளா(ய்)—உனைத்
தேடோர்குயில் பேடுருவம் கேளாய்.
3✓
சுந்தரம்மி குந்தகுழல் மேகம்—அவள்
சொந்தநுதல், இந்துவில்ஓர் பாகம்—திருந்
தும்புருவம், வில்லொடுசி நேகம்
தவ யோகம்
வென்றஅ நேகம்—வஞ்சம்
துஞ்சுவிழி, நஞ்சினிலும் வேகம்.
4✓
சந்தம்மலி கின்றமுகம், இந்து—வள்ளைத்
தண்டுசெவி என்பதுவே தந்து—கன்னம்
சாணை, நுனி நாசிஇன்ப சுந்து
மதுச் சிந்து
தல்பொ ருந்து—சிறு
சண்முகம்துப் பாம்இதழ்சி வந்து.
5✓
செங்குமுத புட்பமதை ஒத்து—மொழித்
தேன்உலவும் வாய்நகையோ முத்து—கண்டம்,
சீதரனார் ஊதும்வர நத்து
சொல், தித் தித்துப்
பாகைக் கைத்து—விடச்
செய்யும்என உன்னலாம்உ ளத்து.
6✓
குங்குமவாகு, அங்கசகோ தண்டம்—முன்கைக்
கோ, மகர யாழ்உவமை விண்டம்—கையைக்
கோகனக மோஎனம ருண்டம்,
ஆழி மண்டங்
குலி கண்டம்,—நெருங்
கும்மெளிறு உகிர்கிளியின் துண்டம்.
7✓
கட்டுகதிர்ப் பட்டுமணி வம்பு—கிழி
பட்டுவழி விட்டிடஎ ழும்பும்—கின்ற
கட்டழகாம் வட்டமுலை, செம்பு;
யானைக் கொம்பு;
சிவ சம்பு—குடங்
கைக்கும்வளை யாதபொற்சி லம்பு.
8✓
மட்டவிழ்ப சுந்துளவ மாலே—செங்கண்
வளருகிற தவிசெனும்ஓர் ஆலே—சிறு
வயிறு மயிர் சிற்றெறும்பு போலே
விரை வாலே
வெள்ளம் மேலே—சுற்றி
வந்தசுழி உந்தி, இடை நூலே.
9✓
தரம்அரவ படம்எனஅல்குல் உண்டு—துடை,
தங்கநிறச் செங்கதலித் தண்டு—முழந்
தாட்குவமை கேட்கில்அவை நண்டு
சினை கொண்டு
வளர் பெண்டு—வரால்,
தக்ககணைக் கால்எனும்இ ரண்டு.
10✓
பரடுதராசு, உயர்குதிகந் துகமே—அணி
பரவுபுற வடியிணைபுத் தகமே—கடற்
பவளம், மதி தசவிரல்கள் நகமே
அம்போ ருகமே
பத யுகமே—மயில்
பண்ணும்இளஞ் சாயலையா சகமே.
11✓
மேனகையோடு ஊர்வசிஇந்ந் ராணி,—செல்வம்
மிக்கதிரு, முக்யகலை வாணி—இந்த
மின்னரசி தன் உருவம் காணின்,
நெஞ்சு நாணி
மலர்ப் பாணி—தலை
மீதுகுவித் தேதொழுவார் பேணி.
12✓
சேனையொடு வந்துகருங் காவி—அம்பைச்
செய்யகரும் புச்சிலைவைத் தேவி—சண்டை
செய்யும்ஒரு மன்மதனாம் பாவி
எங்கள் தேவி
உடல் ஆவி—தனைத்
தீர்க்கும்முனம் காத்திடுவாய் மேவி.