முருகன் App
காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார்
தலைவி ஊடல்12 / 24
காவடிச்சிந்து · அண்ணாமலை ரெட்டியார்

தலைவி ஊடல்

1✓
ஆறு முகவடி வேலவ னேகலி
யாணமும் செய்யவில்லை—சற்றும்
அச்சம்இல் லாமலே கைச்சர சத்துக்கு
அழைக்கிறாய் என்னதொல்லை
மீறிய காமம்இல் லாதபெண் ணோடே
விளம்பாதே வீண்பேச்சு—சும்மா
வெள்ளைத் தனமாகத் துள்ளுகி றாய்நெஞ்சில்
வெட்கம்எங் கேபோச்சு.
2✓
மேட்டிமை என்னிடம் காட்டுகி றாய்இனி
வேறிலை யோஜோலி—இதை
வீட்டில்உள் ளார்கொஞ்சம் கேட்டுவிட் டால்அது
மெத்தமெத் தக்கேலி
தாட்டிகம் சேர்கழு காசல மாநகர்
தங்கும் முருகோனே—இந்திர
ஜாலத்தி னால்என்னைக் காலைப் பிடித்தாலும்
சம்மதி யேன்நானே.
3✓
ஆத்திரக் காரர்க்குப் புத்திகொஞ் சம்என்பர்
ஆரும் பழமொழியே—நீயும்
அப்படி என்னைப் பலாத்காரம் செய்திடல்
ஆச்சுது பெண்பழியே
சர்க்கரைக் கட்டிபோல் வள்ளிதெய் வானையாம்
தையல் உனக்கிலையோ—இரு
தையல ரைச்சேரும் மையல் உனக்கென்ன
தானும் ஒருநிலையோ.
4✓
அம்புவி யில்சிறு பெண்களின் மேல்உனக்கு
ஆசைஎன் காணுமையா—நீர்
ஆக்கப் பொறுத்தாலும் ஆறப் பொறாதவர்
ஆகவே தோணுமையா
நம்பும்அண் ணாமலை தாசன் பணியும்
நளின மலர்ப்பாதா—கொஞ்ச
நாளைக்கு மேல்ஒரு வேளைக்கு லீலை
நடத்தினால் ஆகாதா.