முருகன் App
காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார்
சுரம்போக்கு-நற்றாய் இரங்கல்20 / 24
காவடிச்சிந்து · அண்ணாமலை ரெட்டியார்

சுரம்போக்கு-நற்றாய் இரங்கல்

1✓
பாதி ராத்திரி வேளை யில்வீட்டுப்
பக்கத் தில் வந்து மேவி—பஞ்ச
பாத கன்ஒரு பாவி—சிறு
பாவை யைமெள்ளக் கூவி—கையைப்
பற்றிக் கூட்டிக்கொண் டேகி னான்பதை
பதைக்கு தேஎன்றன் ஆவி.
2✓
சோத னைப்பிர கார மாய்எனைத்
தொடர்ந்த தேபெருந் தோஷம்—எவர்
சூதி னால்வந்த மோசம்—இனித்
தொலையு மோபிள்ளைப் பாசம்—இதைச்
சுற்றத் தார்அறிந் தால்எ னக்குமுன்
சொல்வ ரேபரி காசம்.
3✓
தேன்இ லங்கிய காவ னம்திகழ்
சென்னி மாநகர் வாசன்—துதி
செய்அண் ணாமலைத் தாசன்—செப்பும்
செந்த மிழ்க்கருள் நேசன்—நாளும்
சிந்த னைசெயும் தொண்டர் தீவினை
தீர்த்தி டும்முரு கேசன்.
4✓
நானி லம்புகழ் கழுகு மாமலை
நாயகன்பாண்டி நாட்டில்—நெஞ்சில்
நாணம் விட்டுத்தன் பாட்டில்—வெப்பம்
நண்ணி யபாலைக் காட்டில்—மகள்
நடக்க வேண்டிமுன் அடக்க மாய்த்தெய்வம்
லபித்த தோமண்டை ஓட்டில்
5✓
மையல் கொண்டொரு பையல் பின்செல்ல
வயது மீறின மாதோ—இந்த
மார்க்கம் தோன்றின தேதோ—சென்ம
வாச னைப்பலன் ஈதோ—ஐயோ
மாதம் பத்துஞ்சு மந்து பெற்றஎன்
வயிறு தான்எரி யாதோ.
6✓
செய்ய பஞ்சணை யும்பொ றாது
சிவந்து கொப்பளம் ஆகும்—நெரிஞ்
சிப்ப ழம்என்று நோகும்—அவள்
சீர டிரெண்டும் வேகும்—படி
தீயும் கானலில் காயும் வேனிலாம்
தீயில் எப்படிப் போகும்.
7✓
தேடி னும்கிடை யாத தாகிய
திரவி யக்கரு வூலம்—போலே
செனித்த பெண்ணுக்குச் சீலம்—வேறே
திரும்பி னதென்ன காலம்—கொங்கை
திரண்டி டாமுன்னம் மருண்டி டற்கெவன்
செய்தா னோஇந்த்ர ஜாலம்.
8✓
காடு சேர்கையில் கரடி வேங்கைகள்
காட்டு மேஆர வாரம்—அதைக்
காதில் கேட்டுவி சாரம்—வைத்துக்
கலங்கு வாள்அந்த நேரம்—என்றன்
காத லிதன்னை ஆத ரித்துயிர்
காப்ப துவேலன் பாரம்.