முருகன் App
காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார்
வாவி வளம்9 / 24
காவடிச்சிந்து · அண்ணாமலை ரெட்டியார்

வாவி வளம்

1✓
புள்ளிக் கலாபமயிற் பாகன்—சக்தி
புதல்வ னானகன யோகன்—மலை
போலத் தான்திரண்ட
கோலப் பன்னிரண்டு வாகன்
நல்வி வேகன்
2✓
வள்ளிக் கிசைந்தமுரு கேசன்—அண்ணா
மலைக்கவி ராசன்மகிழ் நேசன்—என்றும்
வாழும் கழுகுமலை
வாவி வளம்சொல்லுவேன் மாதே
கேள்இப் போதே
3✓
வெள்ளை நாரைகொத்தும் வேளை—தப்பி
மேற்கொண் டெழுந்துசின வாளை—கதி
மீறிப் பாயும்தொறும்
கீறிச் சாயும்தென்னம் பாளை
யுடன் தாழை
4✓
தெள்ளும் பிள்ளையன்னப் பேடும்—இளஞ்
சேவ லானதுவும் ஊடும்—பின்பு
தேம லர்த்தவிசில்
காம முற்றுவந்து கூடும்
உற வாடும்
5✓
மின்னிக் குலவிமதி மானும்—வரி
வெள்ளைப் பணிலராசி தானும்—மட
மின்னின் விழிகளென
மன்னும் அரியகெண்டை மீனும்
முத்தம் ஈனும்
6✓
வன்னத் தாமரையைக் கண்டு—வாயில்
மதுர ராகம்பாடிக் கொண்டு—மதி
மயங்கிப் பேட்டினுடன்
முயங்கி யேகிடக்கும் வண்டு
கள்ளை உண்டு
7✓
அந்த ரத்துமின்போற் கூடி—கொங்கை
யாலே நீந்திவிளை யாடி—செல்லும்
அந்ந லார்நடக்கும்
நன்ன டைக்குருகி அன்னம்
செல்லும் பின்னம்
8✓
மந்த மேதிஉள்ள எட்டும்—சினை
வரிவ ரால்எழுந்து முட்டும்—போது
மடிசு ரந்துகன்று
தனைநி னைந்துகண்ட மட்டும்
பாலைக் கொட்டும்