முருகன் App
குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் கலம்பகம்
தண்டபாணி சுவாமிகள்
குறம்17 / 25
குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் கலம்பகம் · தண்டபாணி சுவாமிகள்

குறம்

73அறுசீர்த் தாழிசை✓
வாரண கேதனந் தோய மன்னுகுன் றக்குடிக் கோவிற்
காரணன் றன்புயம் சேரக் காதல்மி குத்திடும் அம்மே
ஆரண மும்புகழ் நீபம் அஞ்சுகம் தந்திடும் நாளை
நாரணன் றன்மகள் போலும் நல்ல குறக்கொடி நானே.
74எண்சீர்ச்சந்தம்✓
நானு ரைத்திடும் இந்தக்குறி நாளை மெய்ப்படும் நம்பித்தெரி
ஏனு னக்கிப்படி வம்பிற்றுயர் ஏழுநெற் கைகள் ஒன்றிட்டது
வானும் ஒப்பறு குன்றக்குடி வாழ்சி வந்தஉ டம்புக்குகன்
வேணு னிக்கிணையு யும்கட்கொடி வேண மட்டும்இ ரங்கிக்கொடே.
75நேரிசை வெண்பா✓
இரங்கிக் கொடாதவர்பால் ஏற்கவென என்றன்
சிரந்தொட் டெழுதியவன் செங்கை-பரம்புமங்கட்
குன்றக் குடிக்குன்றாட் கோமலரிற் சீரியதோ
என்றற்(கு) உயிரனையா ளே.
76கட்டளைக் கலித்துறை✓
ஆளாகிக் குன்றக் குடித்தலத் தேகி அறுமுகன்பொற்
றோளா றிரண்டினும் செந்தமிழ்ப் பாமலர் சூட்டினல்லால்
கோளாகும் ஒன்பதுக் கஞ்சாத் திறலும் குலவுதுங்க
வாளான கண்ணினர்க்(கு) ஏங்கா நலமும் வருவதின்றே.
77கலிநிலைத்துறை✓
வருவாய் மனக்கோயில் வாழ்வாய் இருப்பாய் வரங்களெல்லாம்
தருவாய் எனப்பாடும் முனிவோர் களுக்குமோர் தாழ்வெய்துமோ
குருவாகி அரசாகி அன்னையாய்த் தந்தையாய்க் குலதெய்வமாய்த்
திருவாழ்வு குன்றாத குன்றக் குடிக்குள்வளர் செவ்வேலனே.
78மறம் அறுசீர்✓
செவ்வேலன் மருவுகுன்றக் குடித்தலத்து மறவரெனச்
சிறிதும் அஞ்சா(து)
இவ்வேளை யிங்குவந்து பெண்கேட்ட தூதனே
இறைக்கஞ் சேம்யாம்
தெவ்வேதந் தவிர்க்குமெங்கள் கரம்கால்கொள் இறைக்கெல்லாம்
திறல்சேர் உம்கோன்
மைவேற்கண் மகளிர்கொள்ள வல்லோம்காண் கடிதுவந்த
வழிபார்ட் பாயே.
79எழுசீர்✓
வழியலா வழியைச் சதமெனக் கருதும்
மனிதர்போல் மாதர்மேல் மயலாம்
இழிவையே விரும்பிப் பெரிதுநெஞ் சயரும்
இன்னல்தீர்த் தருள்புரிந் தாள்வாய்
பொழிதருங் கருணை விழிகள்ஈ ராறும்
பொறிஉமிழ் கண்கள் ஓராறும்
பழியுறாக் குன்றக் குடித்தலத்(து) அலர்த்திப்
பவனிவந் தருளும்எம் பரனே.
80கலிவிருத்தம்✓
பரவை யீனிய பாவைய ரும்புணர்
குரவு தோய்தரு குன்றக் குடிக்குகன்
பரவி நாடுமெய்ப் பத்தர்தம் பால்அருட்
குரவ னாகிக் குலாவுவ துண்மையே.