முருகன் App
குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் கலம்பகம்
தண்டபாணி சுவாமிகள்
பாயிரம்1 / 25
குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் கலம்பகம் · தண்டபாணி சுவாமிகள்

பாயிரம்

1காப்பு-வெண்பா✓
நன்றான செந்தமிழ்தேர் நாவலர்போற் றும்வண்மை
குன்றாத குன்றக் குடித்தலத்தில்-நின்றாடும்
காலா(ன்) அணியும் கலம்பகத்தைக் காப்பதவன்
வேலா னது(ம்)மயிலு மே.
2கட்டளைக் கலித்துறை✓
மயிலாடு சோலையங் குன்றக் குடியில் வலியவந்து
கயிலாய நாதனும் கைதொழும் கந்தன் கலம்பகத்தைக்
குயிலாகத் தோன்றும் குறத்தியும் கோமளக் குஞ்சரியும்
அயிலான பேரருட் கண்கொண்டு காப்பதுண் டம்புவியே.
3அறுசீர்க் கழிநெடில்✓
சீலமிகும் உடலாதி மூன்றினையும் குருபரன்பாற்
செலுத்து மேலோர்,
பாலணுகித் திருவருட்சீர் உணர்ந்துசெழுந்
தமிழ்மதுரம் பருகு வோரே
காலமழை யனையசெங்கை யுடையகுன்றக்
குடிக்குவேள் கலம்ப கத்தாற்
சாலமகிழ் வுறுவரன்றோ தவளமலர்ப்
பொருட்டுறையும் தைய லாளே.
4கலித்தாழிசை✓
குன்றுதொ றாடலின் முந்திய குன்றக் குடிவேள்மேல்
நன்றுத வுந்தமிழ் கொண்டுக லம்பகம் நவில்கின்றேன்
மன்றுள்ந டம்புரி வோனும்ந றுந்தமிழ் மலையானும்
அன்றுபெ றும்பொருள் கண்(டு)!உய ரும்பதம் அடைதற்கே.
5சந்தக்கவி-எண்சீர்✓
வஞ்சப் புலப்பகைவர் கெட,மாறில் அன்புநவும்,
வந்தித்து முத்திபெறும் அநுபூதி மிஞ்சவிடும்,
நெஞ்சத் திரக்கமுறு கவுமாரர் நண்பருளும்
நிந்தித் திடத்துணியும் அவர்வேர் களைந்தொளிரும்
அஞ்சக் கரத்தில்நிதம் விளையாடு கின்றபரன்
அங்கைத் தலத்தில்உறு பிணைநாணு றுங்கண்உமை
கொஞ்சக் களிக்கும்ஒரு சிறுபாலன் என்றும்வரு
குன்றக் குடிக்குள்வரு புகழ்தோய் கலம்பகமே.