குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் கலம்பகம்
தண்டபாணி சுவாமிகள்
நூல்2 / 25
குன்றக்குடியில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் கலம்பகம் · தண்டபாணி சுவாமிகள்
நூல்
மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா✓
இவை ஆறும் தரவு
நீர்கொண்ட சடையானும் நெடியோனும் நான்முகனும்
சீர்கொண்ட கனகநகர்த் தேவர்களும் முனிவோரும்
காதலித்துப் புகழ்கூறிக் கரங்குவித்துப் பணிவதுகண்(டு)
ஆதரவின் அளவுதெரிந்(து) அருள்புரியச் சலியாமல்
கோகனக மலர்முகத்திற் குறுநகைபூத் திருமடவார்
பாகமுறச் செழுங்கலபப் பரிமீது பரிதிநிகர்
திருமுடிகள் ஓராறும், செவியணிகள் ஈராறும்,
மருமலியும் கடம்பணியும் மார்பிடத்துப் பணிபலவும்,
கொற்றமிகும் தனிவேலும், குலிசமுதற் படைபிறவும்,
சுற்றரைஞாண் முதலியவும், துணைமலர்த்தாள் அணிக்குவையும்,
மிக்கொளிரப் பெருங்கருணை விழிபரப்பித் தவளநிறக்
குக்குடப்புட் கொடிஓங்கக் குலவுகுன்றக் குடிவேளே,
இவை ஆறும் தாழிசைகள்✓
உன்னருளால் உன்னருமை உணர்ந்(து) உனக்கே தொழும்புசெய்யும்
என்னருமை அறியாதார் இடத்தினும்போய் நயக்கின்றேன்
ஓராறு நுதல்விழியுண்(டு) உனக்கெனவும் தெரியார்பால்
சீராரும் தமிழ்க்கவிதைத் திறலுரைத்துத் தளர்கின்றேன்,
இகபரசா தனப்பேறே ஏற்றமெனத் துணியார்பால்
பகலிரவா யலைந்துநயம் பகர்ந்துபொருள் விழைகின்றேன்,
நீபமா லிகைப்பெயர்நூல் நியமத்தே நில்லாமல்
கோபமா தியபொருந்தக் குவலயத்திற் சுழல்கின்றேன்
திசைகள்தொறும் வெண்ணீற்றுச் சிறப்புடையார் மிகுக்காமல்
தசையருந்தி உடல்வளர்ப்போற் சமயம்உறல் சகிக்கின்றேன்,
பேராசை யெனும்பிணியாற் பெருமையுடன் அருமையும்போய்
ஊராருக் காளாகி உனைமறந்து திரிகின்றேன்.
இவை நான்கும் அராகங்கள்✓
இயமனும் வசம்அற இடிநிகர் மொழிபகர்
கயமுகன் மலையொடு கருகிட முடுகினை,
புயமிகும் அரிமுகன் வரையுறழ் பலபல
புயமொடு தலை,அகல் புவியுற ஒருவினை
அடலுறும் அவுணர்கள் அதிபதி யுடல்,மயில்
உடன்ஒரு குகுகென ஒளிர்தர அருளினை
கடவுளர் உறுதுளை கவலையொ(டு) அறமுனம்
இடமிகு பொலநக ரினையினி துதவினை.
இவை நான்கும் தாழிசை✓
ஈசனுக்கும் குறுமுனிக்கும் எழிலருணைப் புலவனுக்கும்
பேசரிய பிரணவத்தின் பெரும்பொருளை அறிவித்தாய்!
கீரனுக்கும் கருகைநகர்க் கிழவனுக்கும் தளைநீக்கிச்
சாரமுறும் தமிழ்மாலை தரித்துமன மகிழ்வித்தாய்!
கச்சிநகர்ப் புலவனுக்கும் கவிப்பகழிக் கூத்தனுக்கும்
பச்சிலையின் திருநீறு பாலித்து முன்னின்றாய்!
பாலையன் முதலாய பலகோடி பக்தருக்கும்
மாலையம் அறக்களைந்துன் மலரடிக்கீழ் அமர்வித்தாய்!
இவை இரண்டும் நாற்சீர் ஓரடி அம்போதரங்கம்✓
ஆறெழுத்(து) உரைப்பவர்க்(கு) அனைத்தும் ஆகிநின்(று)
ஊறெழுத்(து) அழிக்குமோர் உருவும் ஆயினை!
போதமே உயர்வெனப் புகலும் மாதவர்
ஆதரத் தொளிவிடும் அருவும் ஆயினை.
இவையிரண்டும் முச்சீர் ஓரடி அம்போதரங்கம்✓
பலபல மலையினும் நின்றனை
படியுறும் அமணரை வென்றனை
இலகிய புனமிசை சென்றனை
எயினர்கள் தமதுயிர் கொன்றனை.
இவை நான்கும் இருசீர் ஓரடி அம்போதரங்கம்✓
விதியை ஒறுத்தனை வினையை அறுத்தனை
சதியை வெறுத்தனை தருவை இறுத்தனை
கடலை வடித்தனை கவிகள் படித்தனை
நடலை முடித்தனை நடன நடித்தனை.
இது தனிச்சொல்✓
என ஆங்கு
இஃது ஆசிரியச் சுரிதகம்✓
அணிமா முதலிய ஆய சித்தியும்,
பிணிதீர் உடம்பிற் பெருக்கநீ றணியும்
தொண்டர் கூட்டமும், துகளறு புலமை
அண்டர்போற் றிசைப்ப அணைதரும் வாழ்வும்,
மூவகைத் தாய முகிழ்மலர்ப் பூசனை
யாவரும் போற்ற இயற்று மாண்பும்,
பொர்திய மால்வரைப் புனிதர்தம் அவைப்பால்
விதிவழிச் சென்று மீளுந் திறலும்,
புணரி ஆதிய புனலொடு கனற்பால்
தணவரும் சுவைதோய் தமிழ்க்கவி யனைத்தும்
பழுதற வாங்கிப் படியினர்க் குதவும்
விழுமிய புகழும், விரும்புவ பிறவும்
சிறியேன் பெற,நீ திருவுருக் காட்டி
வெறிதோய் மலர்நேர் மென்பதம் புனைந்து
சமரச போதத் தன்மைமுற் றுணர்த்தி
அமல நெஞ்சகத்(து) அடியருட் கூட்டி
இறப்பொடு பிறப்பற இயங்கும்
சிறப்புறுங் கதியிற் சேர்த்தளித் தருளே.
2வெண்பா✓
அருட்பேறு வேண்டுமனத்(து) அன்பர் கவியின்
பொருட்பேறு நாடும் புனிதா — தெருட்பேறும்
என்றற் குதவி எடுத்தணைத்துக் காத்தருள்வாய்
குன்றக் குடியிற் குகா.
3கட்டளைக் கலித்துறை✓
குகனே பரமெனச் சொல்வோர்க்கும் சிற்சபைக் கூத்துடையான்
மகனேயென் றோதி மறுப்போர்க்கும் தக்க வரங்கொடுக்கும்
அகனே! வளம்பெறும் குன்றக் குடியில் அமரும்அறு
முகனே! உனைநம்பி னேன்சிறி யேன்தவம் முற்றுதற்கே.
4கலிநிலைத்துறை✓
முற்றும்உ ணர்ந்தருள் குகனைக் கதிர்வேல் முருகோனைப்
பற்றுந ரேவளர் குன்றக் குடியைப் பரவாதார்
கற்றுயர் கின்றவ ரெனினும் குறைதீர் கனகப்பே(று)
உற்றுணர் கின்றவ ரெனினும் தமியேன் உறவன்றே.
5அறுசீர்க் கழிநெடில்✓
அன்றுநலம் இன்றுகொடி(து) எனக்கால
விகற்பமிக அறைந்து வாழ்நாள்
சென்றுவயோ திகம்பெருத்துத் திண்டாடும்
அவர்குழுவிற் சேர லாமோ?
குன்றுதொறா டலில்உயர்ந்த தெனப்பெரியோர்
விளம்புகுன்றக் குடியில் மேவி
என்றும்ஒரு படித்தாகித் திகழ்வடிவேற்
பெருமானே எனைக்காப் பாயே.
6எழுசீர்க் கழிநெடில்✓
காப்பணிந் திலகும் வடிவும்ஓ ராறு
கவின்முகக் கண்டிகைக் கழுத்தும்
பாப்பகர் நாவும் சிவந்தவான் கலையும்
பழுதில்கோ வணத்தொடு கீளும்
நீப்பரி தாய நிலையும்உற் றவரே
நிகரில்குன் றக்குடிக் குகவேள்
மாப்படப் பொரும்வேற் படைப்பெரும் பூசை
வகையெனக் குரைத்தனர் மன்னோ.
7எண்சீர்க் கழிநெடில்✓
மன்னர்முதற் பொருளுடையார் தமையும், உன்றன்
வடிவுணர்ந்(து)ஆ றெழுத்தோதி வழுத்தி டாமல்
கன்னல்வில்வேட்(கு)உருகுமவர் தமையும், செஞ்சொற்
கவிமதுரம் அறியாதார் தமையும், நாடி
இன்னல்உறா(து) உனதடியார்க் கடிமை யாகி
எழுபிறவிக் கடல்கடக்கும் எழிற்சீர் ஈந்(து)ஆள்!
கொன்னகுவேற் பெருமானே! இணைதீர் குன்றக்
குடித்தலத்தில் விளையாடும் கொற்ற வேளே.
பதினான்குசீர்க் கழிநெடில்✓
வேளூக்கு மனநாணும் எழில்கொண்ட குமரனை,
வினைப்பிணி தவிர்த்து மருளாம்
மெய்ஞான வாழ்வினில் விடுக்கும்ஒரு குருபரனை,
வேதா கமந்து திக்கும்
தாளுக் கிசைந்ததல மாமெனஎன் நெஞ்சம்
தனைக்கொண்ட முருகே சனைச்,
சந்தத் தமிழுக்குரிய குன்றக் குடிக்குள்வளர்
சரவணோற் பவனை, நினைவோர்
வாளுக்கு நிகர்விழிக் குறமகளும் இந்திரன்
வளர்த்தபே தையும்எ டுத்து
மார்போ டணைத்துச்சி மோந்துமே கலைபுனையும்
மடிமீ திருத்து வதனால்
கோளுக்கும் அஞ்சாத வலியுறும் கவுமாரர்
குலதிலக ராகி அப்பால்
குறுமுனியும் ஈசனும் பெற்றதைப் பெற்றுக்
குணாதீதர் ஆவர் அன்றே.
9எண்சீர்த் தாழிசை✓
ஆவலென்ற பேய்பிடித்துள் அறிவுகெட்டு மங்கையர்க்(கு
அநுதினம் தொழும்புசெய்யும் அவர்களோடும், வெண்ணிற
சேவலைப் புகழ்ந்திடாத கவிஞரோடும், நிலையிலாத்
தெய்வம்நாடும் முனிவரோடும், நைவதைத் தவிர்த்திடாய்
மூவலற்றி லங்குகுன்றக் குடியுள்நின்ற முதல்வனே
முச்சுடர்க்கும் மூலமா முளைத்தெழுந்த சோதியே
பாவகத்த டங்கிடாத பன்னிரண்டு கையனே
பத்தர் சித்தர் நித்தர் முத்தர் பரவுதுங்க வேலனே.
10பதினான்குசீர்க் சந்தக்கவி
தானன தந்தத் தனத்த தானன-தந்ததானா✓
வேலணி யுங்கைச் சிறப்பும் ஆறிரு
தோள்களும், அன்பிற் சிரிக்கும் வாய்களும்,
வேறிணை யின்றிச் சொலிக்கும் மாமகு டங்கள் ஆறும்,
கோலமு றும்பத் தருக்குள் ஆடிய
தாள்களும், அங்கைபி பிடிக்கு நேருரு
கோதைய ருஞ்,சற் றுளத்தி லேனும்இ ரங்கொ ணாதோ.
மாலயன் அஞ்சித் தொழக்கு லாவிய
சூலமு டன்சிற் சபைக்குள் ஆடிய
வானவன் அன்புற் றணைக்கும் ஆர்வமி குங்கு மாரா
சீலமி குஞ்சொற் றமிழ்க்கு நாயகன்
ஆகவி ளங்கிப் பொழிற்கு லாவிய
சீர்பெறு குன்றக் குடிக்குள் மேவிய கந்த வேளே.