முருகன் App
திருவேல் திருவுலா
பாவலர் பேகன்
கவிஞன் வேண்டல்14 / 27
திருவேல் திருவுலா · பாவலர் பேகன்

கவிஞன் வேண்டல்

59✓
அம்மையப்பர் திருமுன்னை
நாடிச் செல்லும்
அயில்வேலே அடியேன்என்
வேண்டல் கேட்பாய்
செம்மைமிகு நல்வாழ்வை
எனக்க ருள்வாய்
செந்தமிழின் நாவன்மை
திருவு ளந்தா!
இம்மையிலும் மறுமையிலும்
வேலன் மேலே
இம்மியும்ஓர் ஐயமிலா
மனத்தைத் தாராய்!
வெம்மைசேர் ஆசைஅற
மார்க்கம் சொல்வாய்
விளங்குமறைப் பாசொன்னேன்
உன்றன் மேலே!
60✓
கலியுகத்துக் கொடுமைகளைக்
கணக்கெ டுத்துக்
கவிதையினால் யான்கூற
வல்லேன் அல்லேன்
மலிந்ததுகாண் எங்கெங்கும்
மறமே! நேர்மை
மண்ணோடு மறைந்ததுவோ
என்றே அஞ்சும்
நிலையதுவும் வந்ததையா
நீதி நேர்மை
நெறிவாழ்வும் நீணிலத்தில்
தழைக்கச் செய்ய
இலைவேலே அருள்செய்வாய்
இக்க ணத்தே
இவ்வடிமை செய்ததவம்
பலிக்கு மாதோ!
61வேறு✓
மூவரும் காணா மேலாம்
முக்கணார் அடியார்ச் குற்ற
தீவினை அறுப்ப தற்குத்
திருவருள் செய்த பிள்ளை
தேவர்கோன் திருக்கை மீது
திகழொளி செய்யும் வேலே
பாவிஎன் பிறப்ப றுக்க
பழுதிலா வரமே தாராய்!
62வேறு✓
அடக்குமுறை தலைவிரித்தே ஆடும் ஆட்சி
அறவழியில் நிற்போரை நசுக்கும் ஆட்சி
எடுத்ததெற் கெலாம்படையை மக்கள் மேலே
ஏவிவிட் டவருயிரைக் குடிக்கும் ஆட்சி
சடசடென மடமடென சரிந்து வீழ
சைவநெறி அவன்பின்னே தழைக்க நீயும்
விடுவிடுஉன் வெங்கதிர்வேல் கொடியோர் மேலே
மேதினியில் அறம்வெல்லும் வேல்நீ வாழி!
63வேறு✓
ஓமெனும் பிரண வத்தை
ஒருநாள்யான் கேட்கச் சொன்னாய்
பூமியிற் புனித கங்கை
புதுத்தேனாய் ஒளியைச் சிந்தி
ஓமெனும் ஒளியி னோடு
வருவதாய் உணர்ந்தேன் ஐயா
நாமநீர் வைய வாழ்வில்
நனிகேட்க அருள்வாய் வேலே!
64வேறு✓
கலியுகத்தில் வாழ்கின்ற அடியேன் என்னைக்
கதிர்வேல்உன் கருவியாய் ஆக்கிக் கொள்ளே
உலகத்தில் மலிந்திருக்கும் மாயை நீக்கி
உய்யும்வழி மாந்தருக்குக் கூறும் நல்ல
கலைமிகுந்த நாவன்மை அருள்வாய் வேலே
கவிதைமழை யான்பொழிய அருள்வாய் அப்பா!
வலிவுடைய நற்றோளும் வைர நெஞ்சும்
வளர்செல்வம் எனக்கருள்வாய் வடிவேல் நீயே!