முருகன் App
திருவேல் திருவுலா
பாவலர் பேகன்
திருவேல் திருஉலா22 / 27
திருவேல் திருவுலா · பாவலர் பேகன்

திருவேல் திருஉலா

75✓
வெற்றிதனைச் சேவலுமே விளக்கிக் கூவ
மிகுதோகை மயிலதுவும் சுமந்து செல்ல
நற்றவத்தார் செய்தபல நற்ற வத்தால்
நான்மறைகள் பெற்றபெரும் பாக்கி யத்தால்
நெற்றிக்கண் ணனார்பெற்ற திருக்கு மாரன்
நீள்கையி லமர்ந்துவேல் உலாக்கொண் டாங்கே!
உற்றதிரு கயிலாயம் நோக்கிச் செல்லும்
உமையோடே அப்பருமே மகிழு மாறே!
76✓
வெற்றிதனை உரைப்பதற்கு விரைந்து செல்லும்
வேல்முருகன் பின்னாலே அணிவ குத்தே
உற்றஅன்பு வீரபாகு தலைமை தாங்க
உயர்வீர பூதகணம் அனைவர் வந்தார்
பெற்றபிள்ளை வருவதனை உணர்ந்த பெற்றோர்
பேருவகை கொண்டேதம் அருட்கண் ணாலே
உற்றுஉற்று நல்வரவு பார்க்க லானார்
ஒப்பில்லாப் பெருமைபெறும் ஒளிவேல் வாழி!
77✓
இமயகிரி அருகில்வர என்ஐ கந்தர்
ஈரேழு புவனத்தின் இறைவ ரோடே
உமையம்மை யும்எழுந்தே எதிர்கொண் டேயி
ஓங்குமன்பால் முருகவேளை உச்சி மோந்து
தமதுமார் போடணைத்து மகிழ்ந்தார் இந்தத்
தரணியெலாம் தருமநெறி நிறைந்த தம்மா!
தமையனை அணைத்தாரைங் கரத்து வள்ளல்
சக்திமிகு வேலேநீ நீடு வாழி!
78✓
பற்றுறுத்த அம்மையப்பர் பற்று வைத்தார்
பற்றுநீத்த பரமகுரு முருக னாராம்
பெற்றெடுத்த பெருநிதியம் மீதே! அங்கே
பெருகுபக்தி யாழ்சூழ்ந்த ஞானி யர்கள்
நற்றவத்தோர் வானுலகோர் பார்த்தோர் எல்லாம்
பற்றுறுக்கும் பற்றதனைப் பற்றிக் கொண்டார்
உற்றஒரு கலியுகத்தைக் காக்க வந்த
உயர்வேலே உன்நாமம் கோடி போற்றி!
79✓
சூரனைஐ யன்மாய்த்த அவ்வி டத்தில்
தோத்தான்றோத் தான்தோத்தான் சூரன் என்று
வீரமுடன் சீரலைகள் விளம்பும்அந்த
வேலையரு கேகோவில் கொள்க வேலா
தாரணிந்த மார்பனன வானோர் வேண்ட
தண்டபாணி கோவில் கொளச் சித்த மானார்
யாரங்கே தொழுதாலும் அங்கே தோன்றும்
அருள்வேலே நின்நாமம் வாழ்க என்றார்.
80✓
ஆறுபடை வீட்டினுள்ளே இரண்டாம் வீடாய்
அமைத்திடுக திருச்செந்தில் என்ன மேலோர்
ஆறுமுக வள்ளலுமே செந்தில் தன்னில்
அழகாகக் கோவி(ல்)கொண்டார்! அகில மெல்லாம்
மாறின்றி உவகையிலே மகிழ்க வென்றே!
மாத்தமிழ்போல் எந்நாளும் மங்கி டாமல்
சீரலைகள் திருமுருகன் புகழைப் பாடும்
திருச்சீ ரலைவாய்சேர் திருவேல் போற்றி!