முருகன் App
திருவேல் திருவுலா
பாவலர் பேகன்
தேவர்கள் திருவேலை வாழ்த்தி வணங்குதல்2 / 27
திருவேல் திருவுலா · பாவலர் பேகன்

தேவர்கள் திருவேலை வாழ்த்தி வணங்குதல்

2✓
பூவுலகில் அடியார்க்குப்
போந்திட்ட குறைகளையும்
புனிதமிகும் திருவேல் போற்றி!
தேவர்தம் துயர்தீர்த்துச்
செகமெல்லாம் அருள்நாட்டும்
செவ்வேட்கை நெடுவேல் போற்றி!
3✓
உலகெல்லாம் படைத்தளித்
துயிரெல்லாம் புரந்தருளும்
உமையம்மை பெற்ற செல்வன்
கலையெல்லாம் ஒருருவாய்
உருவெடுத்த கந்தவேளின்
கையிருக்கும் நெடுவேல் வாழி!
4✓
மாறுபடு சூரனுடல்
கூறுசெய்தே ஈராக்கி
மயிலாக்கி கோழி யாக்கி,
நூறுகோடி அசுரசேனை
நூறிவாகை கொண்டவேல்
நுனிசிறந்து நீடு வாழி!
5✓
தஞ்சமெனத் தன்னுதவி
கெஞ்சிவரும் அடியார்கள்
அஞ்சிவரும் பகைகள் ஆங்கே
பஞ்சுபடத் தூள்படுத்தி
மிஞ்சுசுகம் பக்தருக்கீ
மேன்மைமிகும் திருவேல் போற்றி!
6✓
செல்வமெலாம் தந்தருளிப்
பல்வளங்கள் பலசுரக்க,
திருஅடியார்ச் கருளிச் செய்து
வல்வினையை வேரறுத்து
நல்லறத்தை நிலைநாட்டும்
வாகைமிகு திருவேல் வாழி!
7✓
தாயெனவே அன்புசெய்து
சேயனையே காக்கும்நல்வேல்
செகந்தன்னில் துணையா கும்வேல்!
மாயனாரின் மருகனாரின்
மணிக்கரத் திருக்கும்வேல்
வாழ்கநீ டூழி வாழி!
8✓
வைரத்தை உருக்கியே
வார்த்தெடுத் திட்டவேல்
வாகையே ஈயும் நல்வேல்
தைரியம் எமக்களித்துத்
தருமநெறி கடைப்பிடிக்க
சக்திதரும் திருவேல் வாழி!
9✓
வஞ்சகத்தார் அடியார்க்குப்
பகையாக வரும்போது
வதைத்துப்பகை நூறும் நல்வேல்
கொஞ்சுதமிழ்ப் பாமாலை
வேட்கையுறும் குமரேசன்
கையகத்துக் கூர்வேல் வாழி!
10✓
எவ்வரம் வேண்டினும்
அவ்வரம் எமக்கருளும்
ஈடற்ற காம தேனா
இவ்வுலகில் செல்வமெலாம்
செவ்வையுற ஈந்தருளும்
இணையற்ற நல்வேல் வாழி!
11✓
சூலக்கர சுந்தரியின்
பாலன்தே வர்பகைக்குக்
காலனென வந்து தித்த
சீலன்,திரு முருகன்றன்
கோலமிகு திருக்கரத்தின்
வேலதுகாண் வாழி! வாழி!
12✓
பதைபதை பதையெனப்
பதைத்தடி யார்வரின்
பகைத்தவனுக் கஞ்சி நொந்து
குதிகுதி குதியெனக்
குதித்துவந் தப்பகை
மிதித்திடு திருவேல் வாழி!
13✓
அச்சத்தைத் தவிர்ந்திந்த
அவனிதனில் அடியார்க்கே
அன்புசெயும் நல்வேல் வாழி!
இச்சைக்கு கந்தவரம்
எல்லாமே எமக்கருளும்
எனதையன் நல்வேல் வாழி!
14✓
மயில்வா கனத்தரசன்
மணிக்கரத் திருக்கும்வேல்
மரகத மணிவேல் வாழி!
குயில்மொழி யாளந்தக்
குறத்தியம்மை தனைநெஞ்சிற்
கொண்டவன் கைவேல் வாழி!
15✓
ஆறுபடை வீடுடைய
ஐயன்கை அழகுவேல்
அறிவுவடி வான நல்வேல்
வேறுபல அடியவர்க்
கருளும்வேல் பீடுபெற்றுப்
பிறங்குகின்ற திருவேல் வாழி!
16✓
உலகத்துச் சக்தியெலாம்
ஒருருவாய் உருவெடுத்தே
உயர்ந்தோன்கை யமர்ந்த நல்வேல்
நிலையுலகில் அறம்நாட்டி
கலைவளரச் செய்கின்ற
நிமலன்கை நெடுவேல் வாழி!
17✓
ஞானமே உருவெடுத்த
நல்வேல்இன் நானிலத்து
நான்மறையோர் துதிக்கும் ஓர்வேல்
வானதே வர்குறைகள்
வற்றச் செய்திட்டவேல்
வாழியே முருகன் கைவேல்!
18✓
வேதத்தின் முதலாக
விளங்குகின்ற நாயகியே
வேலாக வந்தா ளம்மா!
ஆதியந்தம் இல்லாத
அந்தணன்தன் தேவியவள்
அறிவான அருள்வேல் வாழி!
19✓
எந்தஇடம் நினைத்தாலும்
அந்தஇடம் வந்தருளும்
கந்தன்கைத் திருவேல் வாழி!
நொந்திருக்கும் அடியவர்தம்
சிந்தையது மகிழுமாறு
செந்தேன்பெய் திருவேல் வாழி!
20✓
நினைக்கும் அடியவர்
மனத்தில் அருள்தனைக்
கணத்தில் அருளும் கந்தன்
கனக மணிநிகர்
கரத்தி லிருந்திடும்
கவினார் கதிர்வேல் வாழி!
21✓
நெஞ்சம் நினைக்கவும்
அஞ்சேல் எனஉவந்து
அடியவர் துன்பம் நீக்கும்
மிஞ்சும் ஒளிமிகு
கந்தன் கரத்தமர்
மிடுக்குடை நெடுவேல் வாழி!
22✓
கலியுகத்தில் அறம்நாட்டி
கருணைவழி முறைசெய்து
காக்கவந்த நெடுவேல் வாழி!
வலிமைதனை அறத்தார்க்கு
வழங்கியருள் வடிவேலன்
வண்கையின் திருவேல் வாழி!
23✓
பொங்கிஎழும் கடல்தன்னைப்
பூரித்தே ஆர்த்தெழுந்து
புறந்தன்னில் ஓட்டிவிட்டே
இங்குலகில் அமைதிதனை
எமக்கருள் எம்இறைவன்
இருங்கையார் எழில்வேல் வாழி!
24✓
அருளொழுகும் ஈராறாம்
அழகுமிகும் நயனங்கள்
அறுமுகன் அங்கை நிற்கும்
கருணைமிகு கதிர்வேல்தம்
அடியவர் துயர்களெல்லாம்
கணத்தினில் நீக்கும் நல்வேல்!
25✓
மங்காத ஒளிசேரும்
மாத்தமிழ்க் கருள்கூறும்
மாணிக்கத் திருவேல் போற்றி!
இங்குலகில் அடியவர்தம்
இன்னலெலாம் தீர்த்தருளும்
இலைநெடுவேல் போற்றி போற்றி!
26✓
அம்மைதிரு பராசக்தி
அருள்வடி வானமேல்
அறம்பிழைத்தோர் தம்மை மாய்த்துச்
செம்மைதனை வையத்தில்
சேர்ப்பிக்கும் திருமிகுவேல்
சிறந்தெங்கும் நீடு வாழி!
27✓
வாகையே தருகின்ற
வண்ணமிகு திருவேலை
வணங்கியே வாழு கின்றேன்
தோகைமேல் உலவுகின்ற
சுந்தரனே எம்தலைவன்
சுடர்வேல்நின் நாமம் போற்றி!
28✓
கலியுகம் தன்னிலறம்
காத்திட வந்திட்ட
கற்பகவேல் போற்றி போற்றி
வலியோ ரிடமிருந்தே
எளியோரைக் காப்பாற்ற
வந்தருள்செய் திருவேல் போற்றி!
29✓
எந்தநிலை வந்தாலும்
ஈடில்லா அறநெறியை
இம்மியும் பிறழா மற்கா
கந்தன்கை திருநல்வேல்
கனகமணி எழில்நெடுவேல்
காலமெலாம் வாழி வாழி!
30✓
கடமைசெயும் அடியாரைக்
காத்தருளும் கதிர்நெடுவேல்
கருணைசேர் கந்தன் கைமேல்
தடம்புவியில் அடியவரைத்
தருணத்தில் காக்கும்வேல்
தமிழ்போன்று நீடு வாழி!
31✓
தமிழ்ப்பாடி யாருள்ளம்
தடுமாறும் தருணத்தில்
தடுத்தாட்கொள் சக்தி வேலே!
கமழ்மணஞ்சேர் அறம்வளர்த்து
மறம்மாய்த்துக் காத்தருளும்
கந்தன்கை கருணை வேலே!
32✓
வையத்தில் சைவநெறி
வளரத்துணை செய்யும்வேல்
வாகையே ஈயும் நல்வேல்
ஐயமிலா மல்உதவி
அடியவர்க்கே அருளும்வேல்
அணிநெடுவேல் போற்றி போற்றி!
33✓
ஞானமெனும் விண்பறந்து
நற்சோதி தனைக்காண
நன்கெனக் குதவும் நல்வேல்
கானமிகும் தமிழ்ப்பாடற்கு
அருள்செய்து எனைக்காக்கும்
கந்தன்கை திருவேல் வாழி!